இலங்கை

வைத்தியசாலையின் கவனக்குறைவால் உயிரிழந்த பெண்!

Published

on

வைத்தியசாலையின் கவனக்குறைவால் உயிரிழந்த பெண்!

களுத்துறை போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

களுத்துறை பகுதியினை சேர்ந்த 53 வயதுடைய குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு வயிற்றில் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் பெருங்குடல் அறுவை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சையின் பின்னர் நோயாளிக்கு திரவ உணவை வழங்குமாறு சிறப்பு மருத்துவர் மருத்துவமனைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கமைய நோயாளிக்கு திரவ உணவு மாத்திரம் வழங்கப்பட்ட நிலையில் வயிற்றில் இருந்து உணவு வெளியேறி துர்நாற்றம் வீசியுள்ளது.

இது தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்கள், செவிலியர்களிடம் அறிவிக்கப்பட்டும் இது சாதாரண நிலை என்று கூறியுள்ளனர்.

உடனடியாக சத்திரசிகிச்சை செய்த வைத்தியரை சந்திக்க வேண்டுமென நோயாளியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தும் வைத்தியர் நோயாளியை பார்க்க வரவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து குறித்த பெண்ணின் உடல் நிலை மோசமடைந்தமையினால் களுத்துறை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில் நோயாளர் காவு வண்டியில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்ட இடத்திலிருந்து அதிகப்படியான உணவு வெளியேறியதால், அந்த பகுதியில் கிருமித் தொற்று ஏற்பட்டமையே மரணத்திற்கு காரணம் என ராகம வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலையின் கவனயீனம் காரணமாகவே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version