அரசியல்

ஜனாதிபதி – தமிழரசுக்கட்சி சந்திப்பில் இணக்கம்!

Published

on

ஜனாதிபதி – தமிழரசுக்கட்சி சந்திப்பில் இணக்கம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கி நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி அதிகாரப்பகிர்வு விவகாரத்தைப் பொறுத்தமட்டில் கடந்தகால ஆவணங்களை ஆராய்வது குறித்தும், முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்களையும் பேச்சுவார்த்தையில் இணைத்துக்கொள்வது பற்றியும் இதன்போது பேசப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடங்கலாக வட, கிழக்கு மாகாணங்களில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று செவ்வாய்கிழமை பி.ப 3.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இருப்பினும் ஜனாதிபதியுடனான இச்சந்திப்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொண்டிருக்கவில்லை.
ஜனாதிபதியுடனான இன்றைய  சந்திப்பின்போது ஆரம்பத்தில் ” வடக்கி கிழக்கு என்பது தமிழர் தாயகம், எனவே அதனை பிரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என சுமந்திரன் மற்றும் சாணக்கியன் எம்.பிக்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்ததுடன், பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் போது வடக்கு கிழக்கை இணைந்தே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அதுமாத்திரமன்றி நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் பேசவேண்டுமெனில்  கிழக்கு மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்துதான் அச்சந்திப்புக்களில் பங்கேற்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதில் தெரிவித்த ஜனாதிபதி ரணில், வடக்கி கிழக்கு மாகாணங்களில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தனித்தனியாக கலந்துரையாடினால் சுலபமாக பேசலாம் என்ற நோக்கத்திற்கு அமையவே இவ்வாறு அழைப்பு விடுத்ததாகும், அதற்கு தமிழ் கட்சிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றால் வடக்கு கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் 11ஆம், 12ஆம் திகதிகளில் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள கிழக்கு எம்.பிகளுக்கு நாளைக்கே அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 அதன்படி 11 ஆம் திகதி நல்லிணக்கம் சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், அரசியல்கைதிகள் விவகாரம், காணிப்பிரச்சினை, பயங்கரவாதத்தடைச்சட்டம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படும். அதேபோன்று 12 ஆம் திகதி அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாடப்படும்.
மேலும் அதிகாரப்பகிர்வு குறித்துப் பேசும்போது எந்தெந்த ஆவணங்கள் குறித்துக் கவனம்செலுத்தவேண்டும் என்று ஜனாதிபதி தமிழரசு கட்சியிடம் வினவியுள்ளார். எனவே இவ்விவகாரத்துடன் தொடர்புடைய முக்கிய கடந்தகால ஆவணங்கள் தொடர்பில் சம்பந்தன் தரப்பினர்  எடுத்துரைத்துள்ளதாக தெரிவித்தனர்.
அதேவேளை 13 ஆம் திகதி சனிக்கிழமையன்று நடைபெறவிருந்த சந்திப்பில் வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அச்சந்திப்பைப் பிற்போடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதற்கான காரணமாக ஜனாதிபதி தரப்பு தெரிவிக்கையில், இப்போது வரையில் வடக்கின் அபிவிருத்தி குறித்தே அரசாங்கம் வேலைத்திட்டங்களை தயாரித்துள்ளது, கிழக்கிற்கான அபிவிருத்திகள் குறித்து இன்னமும் அரசாங்கம் எந்த வேலைதிட்டங்களையும் ஆரம்பிக்கவில்லை. ஆகவே வடக்கின் அபிவிருத்தி குறித்து மட்டுமே பேசவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை நிராகரித்த தமிழரசு கட்சியினர், கிழக்கிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை தயாரித்த பின்னர் வடக்கி கிழக்கிற்கான முழுமையான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடலாம் என வலியுறுத்தியுள்ளனர்.
அதற்கமைய எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவிருந்த வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் கால வரையரையின்று பிற்போடப்பட்டுள்ளது.
#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version