அரசியல்

தையிட்டியில் போராட்டக்காரர் இருவர் காரணமின்றி கைது!

Published

on

தையிட்டியில் போராட்டக்காரர் இருவர் காரணமின்றி கைது!

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற இருவர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரை பார்க்க சென்றவர்களில் இருவரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை பொலிஸார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி நேற்று(03) மாலை முதல்  போராட்டம் இடம்பெற்றுவரும்  நிலையில் நேற்று இரவு முதல் போராட்டகாரர்களை அச்சுறுத்தி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக அப்பகுதிக்குள் ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்கள் யாரும் நுழையமுடியாதவாறு பொலிஸார் வாகனங்களை வீதிக்கு குறுக்கே நிறுத்தி தடையேற்படுத்தினர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் உள்ளிட்ட சிலர் பொலிஸாருடன் வாதம் புரிந்த நிலையில் போராட்டக்களத்தில் முற்றுகைக்குள்ளாகினர்.

இதன் காரணமாக அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து நேற்று புதன்கிழமை (03) கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விகாரையை சுற்றியுள்ள காணிகளையாவது விடுவிக்குமாறு கோரியும், சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தொடரச்சியாக மூன்று நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.எதிர்வரும் வெசாக் தினமான வெள்ளிக்கிழமை வரையில் தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக குறித்த பகுதியில் பந்தல் அமைக்க முற்பட்ட நிலையில், பொலிஸார் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.

இந்த நிலையில் தனியார் காணியொன்றில் பந்தல் அமைக்க முயன்றபோதும் அதற்கு இடமளிக்காத பொலிஸார் பந்தல் காரர்களை அச்சுறுத்தியதுடன் பந்தல்களையும் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

போராட்டகாரர்களை அச்சுறுத்தி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு வெளியில் இருந்து உணவு, நீர்,மருந்து என்பவற்றை எடுத்து செல்ல அனுமதிக்காத பொலிஸார் சில மணி நேரங்களுக்கு பின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீட்டால் உணவு, நீர்,மருந்து என்பவற்றை எடுத்துச் செல்ல அனுமதித்தனர்.

எவ்வாறாயினும் குறித்த விகாரைக்கான கட்டுமானப்பணிகள் தற்போது முழுமைப்படுத்தப்பட்டு கலசம் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version