அரசியல்

சகல மக்களும் சமனென்ற மகிழ் காலம் நீடித்து நிலவட்டும்!

Published

on

பிறக்கும் சித்திரை புத்தாண்டின் வரவில் சகல இன மத சமூக மக்களும் சமனென்ற மகிழ் காலம் நீடித்து நிலவட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“இன மத பேதங்கள் இன்றி, தமிழ் – சிங்கள மக்களை பண்பாட்டு விழுமியங்களால் ஒன்று பட வைத்திருப்பது சித்திரை புத்தாண்டு.
அது போலவே சகல மக்களின் இன மத உணர்வுகளும் சமனென மதிக்கப்படும் சமத்துவ தேசத்தையே நாம் விரும்புகிறோம்.
மனித நேயமே எமது மதம். எமது மக்களின் இன மத அடையாளங்களை
பாதுகாக்கவும், உரிமைகளை பெற்றிடவும் தேசிய நல்லிணக்க வழி நின்று தொடர்ந்தும் வெற்றி காண்பதே எமது மக்களுக்கு நாம் ஆற்றும் பணியாகும்.
வெற்றுக் கூச்சல்களும், வெறும் வார்த்தைகளும் எமது மக்களுக்கு
எந்த விமோசனங்களையும் பெற்றுத்தராது.
மாறாக, தீர வேண்டிய பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக்கும் அரசியல் கபட நோக்கங்களே நடந்தேறும்.
மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் ஊடுருவிப் பாயுமென்ற எமது மதிநுட்ப வழி நின்று நாம் ஆற்றிய மாபெரும் மக்கள் பணிகளின் கண்கண்ட சாட்சியங்கள் போல், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கைத்தீவு மீட்சி பெற நாம் எடுத்த அரசியல் நிலைப்பாடும், நிதானமும், இன்று மெல்லென வெற்றி கண்டு வருவது போல், இனிவரும் காலங்களில் எல்லா பிரச்சினைகளுக்கும் நிரந்த தீர்வுண்டு என்ற நம்பிக்கையோடு பிறந்திருக்கும் சித்திரைப்புத்தாண்டை வரவேற்போம்.
கடல் வளம், நில வளம், கல்வி வளம், மற்றும் பொருளாதார வளமென
சகல வளங்களையும் பாதுகாக்கவும்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவ நீதியை உருவாக்கவும், துயர்களும் தடைகளும் நீங்கி மகிழ்வெழுச்சியுடன் சகல உரிமைகளும் பெற்று எமது மக்கள் நிமிர்ந்தெழவும், பிறந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டில் இன்னமும் வலிமையுடன் உழைப்போம்” என்று அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version