இலங்கை

ஊழலை ஒழிக்க ஒன்றிணையுங்கள்!!

Published

on

சர்வதேச நாணய நிதியத்தின் தொழிநுட்ப உதவியுடன் முன்மொழியப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கரிசனை செலுத்தி இலங்கையிலிருந்து ஊழலை ஒழிப்பதற்கும் நிலையான பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பிரஜைகள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூகத்துடன் இணைந்து செயல்பட ஒன்றிணையுமாறு ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த நிறுவனத்தால் செவ்வாயக்கிழமை (11) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

இந்த முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தில் முக்கிய இரண்டு விடயங்கள் தொடர்பில் கரிசனை கொள்வதாகவும் இச்சட்டமானது தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பட மற்ற அனைத்து எழுதப்பட்ட சட்டங்களையும் மீற முற்படுகிறது என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்மொழியப்பட்ட சட்டத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகள் இரகசிய பாதுகாப்பு/காப்பு பிரமாணத்தில் கையெழுத்திட வேண்டிய பிரிவுகள் காணப்படுகின்றன.

ஆகவே, புதிய சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் தகவல்களை வெளியிடுவது ஆணைக்குழுவின் சிறப்பு அனுமதியுடன் மாத்திரமே சாத்தியமாகும்.

எனவே, இம்முன்மொழியப்பட்ட சட்ட ஏற்பாட்டின் அடிப்படையில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிடமிருந்து தகவல்களை அணுகுவதை மிகவும் கடினமாக்குவதன் மூலம் இரகசிய கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது.

மேலும் மசோதாவில் கூறப்பட்டுள்ள “ஆட்சியில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தல்” எனும் நோக்கமும் மறுக்கப்படுகிறது.

ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நஷனல்  நிறுவனம் கரிசனை கொள்ளும் இரண்டாவது விடயமானது, தவறான குற்றச்சாட்டுகளை குறிக்கும் இந்த மசோதாவின் பிரிவு 119 ஆனது, ஊழல் தொடர்பில் தகவல் வழங்க விரும்பும் பொதுமக்களுக்கும் முறைக்கேடுகளை வெளிப்படுத்தும் நபர்களுக்கும் எதிர்மறையான சமிக்ஞையை தோற்றுவிக்க கூடும் என நிறுவனம் குறிப்பிடுகிறது.

தற்போதைய சட்டத்திலும் காணப்படுகின்ற அதே சட்ட ஏற்பாடானது ஊழலுக்கு எதிராக செயற்படும் நபர்களை குறிவைத்து தவறாக பயன்படுத்தப்படவில்லை.

என்றாலும், அரசியல் ரீதியாக செல்வாக்கு செலுத்தும் பொதுச் சேவையின் பின்னணியில் அல்லது ஜனநாயகம் வலுவிழந்த நிலை அல்லது பலவீனமான ஆட்சிமுறைமை அல்லது ஊழல் மிக்கவர்களின் ஆட்சி போன்ற பாதகமான சூழ்நிலையில் இந்த சட்ட ஏற்பாடானது தீவிர எதிர்விளைவு மற்றும் ஆபத்துக்கூடியாதாக மாறும்.

பிரஜைகளின் கருத்துச் சுதந்திரத்திற்காக தமது செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஓர் அமைப்பு என்றடிப்படையில் இந்த முன்மொழியப்பட்ட மசோதாவானது மிகவும் வலுவானதாக அமைய வேண்டும் என்று ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நஷனல் கருதுகிறது.

அதேவேளை, ஊழல் தொடர்பில் தகவல் வழங்க விரும்பும் பொதுமக்களுக்கும் முறைக்கேடுகளை வெளிப்படுத்தும் நபர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது ஊழல் தொடர்பில் முறையிட ஊக்குவிக்க வேண்டும் என்று கருதுவதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version