இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம்! – 25 வரை காலக்கெடு

Published

on

2021 ஆம் ஆண்டு இந்நாட்டின் கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எஞ்சியுள்ள பாகங்களுக்கு அருகில் சென்று ஆய்வு செய்து இழப்பீடுகளை மதிப்பீடு செய்வதற்கான மாதிரிகளைப் பெற்றுக்கொள்ள நிபுணத்துவக் குழுவுக்கு அவசியமான வசதிகளைப் பெற்றுக் கொடுக்குமாறு சுற்றாடல் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை (நாரா) ஆகியவற்றுக்கு அறிவித்தார்.

கப்பலுக்கு அருகில் அல்லது கப்பலுக்குள் செல்வதற்கு முடியாமல் இருப்பது சுற்றாடலுக்கு ஏற்பட்ட சேதத்தை அளவிடுவதற்கு தடையாக இருப்பதாக சுற்றாடல் மற்றும் ஏனைய சேதங்களின் முழு அளவை கணக்கிடுவதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் இங்கு குறிப்பிட்டனர்.

ஆபத்தானது எனக் காண்பித்து கப்பலுக்கு அருகில் செல்வது தடுக்கப்பட்டாலும், கடற்படையினர் மற்றும் விமானப்படையினரின் ஒத்துழைப்பைப் பெற்று வசதிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்கமைய கப்பலுக்கு அருகில் சென்று இதற்கான மாதிரிகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பது நஷ்டஈடு கோரி தாக்கல் செய்யப்படும் வழக்கிற்கு பாதிப்பாக அமையலாம் என்பதால் இதற்கான வசதிகளை விரைவில் ஏற்படுத்திக் கொடுக்குமாறு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை ஆகியவற்றுக்கு குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார்.

குறித்த கப்பலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. வழக்குத் தாக்கல் செய்வதற்கு இன்னமும் 45 நாட்கள் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும், ஏற்கெனவே அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டமைக்கு அமைவாக சிங்கப்பூரில் வழக்குத் தாக்கல் செய்யப்படுவது பாதகமானதாக அமையலாம் என சூழலியலாளர்கள் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் கருத்துத் தெரிவித்தனர்.

இதுவரை விபத்துத் தொடர்பில் 6.2 பில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்வது தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், வழக்குத் தாக்கல் செய்வது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பு என்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அசேல ரக்காவ இங்கு தெரிவித்தார்.

இந்த அறிக்கைக்கு அமைய குறிப்பிட்ட நஷ்டஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுவதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அத்துடன், இந்தச் சம்பவத்துக்கான நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்வது தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினரை சுற்றாடல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு ஏப்ரல் 25ஆம் திகதி மீண்டும் சந்திப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version