இலங்கை

இருபாலை சிறுவர் இல்ல விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்!

Published

on

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் சிறுவர் இல்லம் ஒன்றினை நடத்தியமை மற்றும் அங்கிருந்த சிறுவர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் அருட்சகோதரி உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றினால் நடத்தப்பட்டு வந்த சிறுவர் இல்லத்தில் துன்புறுத்தல்களை தாங்க முடியவில்லை என மூன்று சிறுமிகள் இல்லத்தில் இருந்து தப்பியோடி இருந்தனர்.
அது தொடர்பில் தகவல்கள் வெளியாகிய நிலையில் விசாரணைகளை சிறுவர் நன்னடத்தை பிரிவினர் கோப்பாய் பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்தனர்.
அதன் போது , குறித்த சிறுவர் இல்லமானது , சிறுவர் இல்லத்திற்கான அனுமதிகள் பெறப்படாது நடாத்தப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டதுடன் , அங்கு இருந்த 13 சிறுவர்களையும் மீட்டனர்.
மீட்கப்பட்ட சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது , சிறுவர்களிடம் கடுமையான வேலைகளை வாங்கியமை , உடல் ரீதியான துன்புறுத்தல்கள் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டமை , உளரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தியமை , கட்டாய மத மாற்றத்திற்கு உள்ளாக்கியமை உள்ளிட்ட விடயங்கள் தெரிய வந்துள்ளன.
அதனை அடுத்து மீட்கப்பட்ட சிறுவர்கள் 13 பேர் மற்றும் ,சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பியோடிய நிலையில் மீட்கப்பட்ட 03 சிறுவர்களாக 16 சிறுவர்களையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி வைத்திய அறிக்கை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை , சிறுவர் இல்ல, முகாமையாளர் , இல்ல காப்பாளர் மற்றும் சமையலாளர்  ஆகிய மூவரையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். அதனை அடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அதேவேளை கடந்த வடமாகாண சபை ஆட்சி காலத்தின் போது , வடமாகாண கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கான தங்குமிடம் என பதிவு செய்யப்பட்டு , சிறுவர் இல்லமாக நடாத்தப்பட்டு வந்துள்ளது. சிறுவர் இல்லத்திற்கான அனுமதிகள் எவையும் பெறப்படவில்லை.
இதேபோன்று மற்றுமொரு சிறுவர் இல்லம் குறித்த இல்லத்திற்கு அருகில் நடாத்தப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் குறித்த சபையின் கீழான இரு சிறுவர் இல்லம் கிளிநொச்சியில் நடாத்தப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
குறித்த சிறுவர் இல்லங்களுக்கான அனுமதிகள் உரிய முறையில் பெறப்பட்டு உள்ளனவா ? அங்குள்ள சிறுவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனரா ? போன்ற விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version