இலங்கை

வெடுக்குநாறி மலை சிவலிங்கம் பி்ரதிஸ்டை – மூவர் விசாரணைக்கு

Published

on

வவுனியா வெடுக்குநாறி மலையில் சிவலிங்கம் பி்ரதிஸ்டை செய்யப்படவுள்ள நிலையில் தொல்பொருள் திணைக்களத்தால் ஆட்சேபம் தெரிவித்து சட்ட நடவடிக்கை எடுக்ககோரி பொலிஸாருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் சிரமதானத்தில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் விசாரணைக்காகவும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

அண்மையில் வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆதிசிவன் வளாகத்தில் தெய்வ சின்னங்கள் அழிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக நெடுங்கேணி பொலிஸ் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை சிலைகளை சேதப்படுத்தியோர் கைது செய்யப்படவில்லை.

இது தொடர்பாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில விசாரணை குழு அமைத்து விசாரணையை முன்னெடுக்குமாறு வவுனியா நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இவ்வேளையில் சர்வமத தலைவர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கூட்டம் நடத்தி குறித்த இடத்தில் மீண்டும் சிவலிங்கம் உட்பட்ட இறைவனின் சிலைகளை வைக்க உத்தரவாதத்தை பெற்றிருந்தனர்.

இதற்கு மறுநாள் வவுனியாவில் வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தின் அழைப்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டதுடன் உயர் தரப்புகளுக்கு வழங்குவதற்காக மகஜர்கள் அரசாங்க அதிபரிடம வழங்கப்பட்டது.

இந் நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த இடத்தில் சிலை வைக்க அமைச்சரவை அனுமதித்ததாக அறிக்கை வெளியிட்டார். அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதிக்கு தான் நேரடியாக வந்து சிலையை வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை வவுனியாவில் சில பொதுமக்கள், ஆர்ப்பாட்டங்கள் தேவையற்றது ஜனாதிபதி சிலையை வைக்க உத்தவிட்டுள்ளார் அது நடக்கும் என தெரிவித்திருந்தனர்.

இவ் வாதபிரதிவாதங்களுக்கு மத்தியில் இன்று அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரையான காலத்தில் சிவலிங்கத்தை பி்ரதிஸ்டை செய்ய ஆலய நிர்வாகத்தால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் நிர்வாகத்தினரை மீறி சிலர் அப்பகுதியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் அவர்களின் பிரசன்னத்துடன் துப்பரவு பணிகளில் ஈடுபட்ட நிலையில், ஆலய பகுதியில் நிர்வாகத்தினருக்கும் அங்கு வந்த சிலருக்குமிடையில் மனக்கிலேசம் ஏற்பட்டதனால் தமது திட்டம் நிறைவேறாமல் போய்விடும் என்ற ஆதங்கத்தில் நிர்வாகத்தினர் கோவில் வளாகத்தில் இருந்து வெளியேறியிருந்தனர்.

இருந்த போதிலும் குறித்த பகுதிக்கு பொலிஸார் வருகை தந்து அங்கு இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் அவதானிப்பில் இருந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தினர் அங்கு சென்று தொல்பொருள் சின்னங்களை மாற்றியமைக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளதுடன், நெடுங்கேணி பொலிஸாருக்கு தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்குமாறு நீதிமன்ற வழக்கு இருக்கும் நிலையில் எவ்வித பணிகளையும் முன்னெடுக்க முடியாது என தெரிவித்தும், அவ்வாறு இடம்பெற்றால் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் குறித்த இடத்திற்கு பாதுகாப்பு கோரியும் கடிதம் வழங்கியுள்ளனர்.

இந் நிலையில் அப்பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபட்ட மூவரை விசாரணைக்காக பொலிஸார் அழைத்து சென்றுள்ளதுடன், நாளைய தினம் சிவலிங்கம் பி்ரதிஸ்டை செய்வதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கான காரணம் அப் பகுதியில் உள்ள நபர் ஒருவர் நிர்வாகத்தினருடன் கலந்து பேசாது தான் தோன்றித்தனமாக செயற்பட்டமையே காரணம் என பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version