அரசியல்

வெடுக்குநாறி விவகாரம் – ஜனாதிபதி உடன் தலையிட வேண்டும்

Published

on

வவுனியா வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் ஆலயம் சேதமாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதுடன், இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டு வரவுள்ளதாகவும் இதில் ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்த அவர், “வவுனியா வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் ஆலயம் தொடர்பாக தொடர்ந்தும் பல சிக்கல்களை திட்டமிட்ட அடிப்படையில் ஒரு சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸார் மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஆலயம் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக உரிய நடவடிக்கைகளையும் விளக்கத்தையும் இந்த இரண்ட தரப்பினர் வழங்க வேண்டும்.

இலங்கையில் தற்பொழுது எற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக நாம் பல நாடுகளுடனும் மிகவும் நெருக்கமான உறவை கொண்டிருக்கின்றோம். உல்லாச பிரயாணிகளின் வருகை அதிகரிப்பதற்காக பல வேலைத் திட்டங்களை முன்னெடத்து வருகின்றோம்.

இவ்வாறான ஒரு நிலையில் இந்த சம்பவங்கள் எங்களுடைய நாட்டுக்கு அவப் பெயரை ஏற்படுத்தக்கூடும். எனவே ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு இதனை முடிவிற்கு கொண்டு வர வேண்டும்.

இந்த நாட்டில் ஏனைய மத ஸ்தலங்களுகக்கு கொடுக்கின்ற கௌரவத்தையும் மரியாதையையும் இந்து மதத்துக்கும் வழங்க வேண்டும். உடனடியாக இந்த ஆலயத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்துக்கள் அனைவரும் இதனை பார்த்துக் கொண்டு மௌனமாக இருப்பதாக மாத்திரம் அரசாங்கம் தப்பாக எடைபோட்டுவிடக் கூடாது என்பதையும் சம்பந்தப்பட்ட அனைவருடைய கவனத்துக்கும் கொண்டு வர விரும்புகின்றேன்” என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version