இந்தியா

மீனவர் விவகாரம்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

Published

on

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களும் விரைவாக விடுவிக்கப்பட தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடந்த 12ம் தேதி இரண்டு விசைப்படகுகளுடன் (பதிவு எண்: IND-TN-08-MM-81 மற்றும் IND-TN-06-MM-7818) சிறைபிடிக்கப்பட்டனர். இந்திய மீனவர்கள் இவ்வாறு இலங்கையைச் சேர்ந்த சிலர் / இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்த மூன்றாவது சம்பவம் இது.

மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர். அடிக்கடி நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் மனதில் அச்ச உணர்வை உருவாக்குகின்றன.

இந்த விவகாரத்தை மாண்புமிகு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு சென்றேன். வெளியுறவுத் அமைச்சரும் இந்த விவகாரத்தை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.

நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் நீங்கள்(பிரதமர்) உடனடியாக இதில் தலையிடவேண்டும். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு மீனவர்களின் 102 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளன. இலங்கையால் விடுவிக்கப்பட்ட 6 மீன்பிடிப் படகுகள் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவித்திட தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLanka #India

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version