இலங்கை
நாகர்கோவிலில் துப்பாக்கி சூடு – சப்பர கொட்டகைக்கும் தீ!!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பொலிஸாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு துப்பாக்கி சூட்டில் முடிவடைந்தது.
துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டு , அப்பகுதிகளில் துப்பாக்கி சன்னங்களின் வெற்றுக்கோதுகள் காணப்படுகின்ற போதிலும் , பொலிஸார் தாம் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என தெரிவித்துள்ளனர்.
அவ்வாறாயின் யார் துப்பாக்கி சூடு நடத்தியது எனவும் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினரை விட வேறு நபர்களிடம் துப்பாக்கி உள்ளனவா என்ற சந்தேகம் எழுத்துள்ளதாகவும் , அதனால் தாம் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அதேவேளை அப்பகுதியில் உள்ள முருகமூர்த்தி ஆலய சப்பர கொட்டகைக்கு தீ வைக்கப்பட்டதில் , கொட்டகை முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாகர்கோவில் பகுதியில் மயானம் ஒன்றினை சுற்றி மதில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற இருந்தது.
அந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை , மதில் கட்டுவது தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டு , மதில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த புலம்பெயர்ந்து வாழும் நபர் ஒருவர் மீது ஊரில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விசாரணைக்காக சென்ற பொலிஸ் குழுவினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அது பின்னர் கைக்கலப்பாக மாறியுள்ளது.
அதன் போது பொலிஸார் பெண்கள் சிறுவர்கள் என பேதம் பார்க்காமல் அனைவரும் மீதும் கடுமையான தடியடி மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் போது துப்பாக்கி சூடுகளும் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் தாம் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என பொலிஸ் தரப்பு மறுத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மயான மதில் அமைப்பதில் முரண்பட்ட தரப்பினரை பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் அழைத்துள்ளனர்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login