இலங்கை
8.4 பில்லியன் – இலங்கை எதிர்பார்ப்பு
எதிர்வரும் 20ஆம் திகதியன்று இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பான வேலைத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) நிறைவேற்று சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், தனது வெளிநாட்டு கையிருப்பை 8.4 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக அறியமுடிகிறது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்களையும் நிதியத்தின் அங்கிகாரம் கிடைத்தவுடன் சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கை எதிர்பார்ப்பதாக நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், தெரிவு செய்யப்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு மூலம் 3 பில்லியன் டொலர்களை பெறுவதற்கும் அராங்கம் எதிர்பார்த்துள்ளது.
2022ஆம் ஆண்டு செப்டம்பரில் பணியாளர் மட்ட உடன்படிக்கை எட்டப்பட்டபோது கொடுக்கப்பட்ட 15 பணிகளை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளது.
மேலும், அனைத்து கடன் வழங்குநர்களும் சர்வதேச நாணய நிதியம் தடையை நீக்குவதற்கு தேவையான கடன் உத்தரவாதங்களை வழங்கியுள்ளனர் என்பதை நிதி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்ட பின்னர் ஏனைய தரப்பினரும் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இந்தப் பின்னணியில், உலக வங்கியின் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி, அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மூலம் 3 பில்லியன் டொலர் மூலம் இலங்கையின் கையிருப்புகளை அதிகரிக்க நிதி அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
கடந்த மூன்று வருடங்களில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சியடைந்ததுடன், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கடந்த வருடம் பெறுவதற்கு அரசாங்கம் போராடியது.
எனினும், இலங்கை மத்திய வங்கியின் தகவலுக்கு அமைய, புதிய அரங்சாங்கத்தின் கீழ், இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதோடு, வெளிநாட்டு கையிருப்புகளும் படிப்படியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login