அரசியல்

6 ஆவது காலாந்தர மீளாய்வு ஜெனீவாவில்

Published

on

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழான இலங்கையின் 6 ஆவது காலாந்தர மீளாய்வு 2023 மார்ச் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை 1980 ஜூன் 11ஆம் திகதி இலங்கை ஏற்றுக்கொண்டது. உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதோடு, உடன்படிக்கையின் அனைத்து அரச தரப்பினரும் குழுவிற்கு அவ்வப்போது அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கும், அவ்வப்போது மீளாய்வுகளில் பங்கேற்பதற்குமானதொரு தன்னார்வக் கடமையை மேற்கொண்டுள்ளன.

அதன்படி, 1983, 1990, 1994, 2003 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் இலங்கை 5 காலாந்தர அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதுடன், 1983, 1991, 1995, 2003 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் 5 மீளாய்வுகளில் பங்கேற்றுள்ளது.

6 ​ேவது அறிக்கை 2019 பெப்ரவரி 22ஆம் திகதி மனித உரிமைகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மனித உரிமைகள் குழு என்பது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்கும் 18 சுயாதீன நிபுணர்களைக் கொண்ட ஓர் அமைப்பாகும். அனைத்து நாடுகளின் மீளாய்வுகளும் இக் குழுவால் நடாத்தப்படுகின்றது.

இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க, 6 ​ேவது மீளாய்வு கலப்பு வடிவத்தில், ஜெனிவாவிலுள்ள ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலகவின் தலைமையில் நடாத்தப்படவுள்ளது.

இலங்கைக் குழுவில் ஜனாதிபதி செயலகம், பொதுப் பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம், நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, சுகாதார அமைச்சு, சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்றவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கொழும்பில் இருந்து சிரேஷ்ட அதிகாரிகள் மீளாய்வுக்கு இணைந்துகொள்வர்.

இலங்கைக்கு மேலதிகமாக, 2023 பெப்ரவரி 27 முதல் மார்ச் 24 வரை நடைபெறவுள்ள மனித உரிமைகள் குழுவின் 137 ஆவது அமர்வின் போது, எகிப்து, துர்க்மெனிஸ்தான், சம்பியா, பெரு மற்றும் பனாமா ஆகிய நாடுகளும் மீளாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.

#world #SriLankaNews

Exit mobile version