இலங்கை

தயக்கமின்றி முறையிடுங்கள் – யாழ் பொலிஸார் அறிவிப்பு

Published

on

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்பாக எந்தவிதத் தயக்கமும் இன்றி முறைப்பாடு செய்ய முடியும்.

அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்ன தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நகர பசார் வீதி வர்த்தகர்களுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். நகரப் பகுதியில் உள்ள பசார் வீதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பசார் வீதியில் ஒரு வழிப் பாதை காரணமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத் தரிப்பிடம் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக ஆராயப்பட்டது.

வீதியில் இருமருங்கும் ஒவ்வொரு தினமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வாகனத் தரிப்பிட வசதியில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.

வாகனங்கள் தரிக்க விடப்படும்போது வர்த்தக நிலையங்களுக்குச் மக்கள் செல்லக்கூடியவாறு வர்த்தக நிலையங்கள் முன்பாக இடைவெளி விட்டு வாகனங்களைத் தரிக்க வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று வர்த்தகர்களால் கோரப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட பொலிஸார், இது தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

வெளிமாவட்டங்களில் இருந்து யாசகம் பெற வருவோரும், சாம்பிராணி விற்க வருவோரும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்கின்றமை தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அவர்கள் மக்களை கட்டாயப்படுத்தும் விதமாக நடந்து கொள்வதால் மக்கள் வர்த்தக நிலையங்களுக்கு வராது அங்கிருந்து விலகிச் செல்லும் நிலைமை காணப்படுகின்றது.

அவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வர்த்தகர்களால் கோரப்பட்டது.

இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சந்திப்பில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர், வர்த்தகர்களிடம் கப்பம் கோருதல் அல்லது வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் எந்தவிதத் தயக்கமும் இன்றி முறையிடலாம் என்று தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கோ, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கோ அல்லது பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கோ முறையிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முறைப்பாடுகள் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வர்த்தகர்கள் முறைப்பாடு செய்வதற்கு எந்தவிதத் தயக்கமும் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version