இந்தியா

இலங்கை கடற்படையினர் கொடூரமாக தாக்கினர்! – இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு

Published

on

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த ஐந்து மீனவர்கள் தமிழகத்தின் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி யை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21ம் திகதி இரவு அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் , அருண் குமார் , மாதவன் , கார்த்தி , முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்று உள்ளனர்.

நேற்று (23) அதிகாலை காரைக்கால் தென் கிழக்கு 44 நாட்டிகல் மைல் தொலைவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலையை பறித்துக் கொண்டதுடன் இரும்பு பைப்பால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதில் ஐந்து மீனவர்கள் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து உடலில் ரத்த கட்டுக்கள் ஏற்பட்டதுடன் ஒரு மீனவருக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இன்று (23) கரை திரும்பிய மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை மேற்கொண்ட பின் மேல் சிகிச்சைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கை கடற்படையினர் படகில் இருந்த இன்ஜினை பறித்துக் கொண்டு தங்களை கொடூரமாக தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

படுகாயம் அடைந்த ஐந்து மீனவர்களுக்கு பொறையார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மீன்வளத் துறையினர் மற்றும் கடலோர காவல் குழும பொலிசாரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நடுக்கடலில் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#SriLankaNews #India

Exit mobile version