அரசியல்

தலைவர் உயிருடன் இல்லை – ‘ரோ’ வின் திட்டமிட்ட சதியே இது

Published

on

விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அவர் உரிய நேரத்தில் வெளிப்படுவார் என்றும் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் சமீபத்தில் அறிவித்தார். இது உலகம் முழுவதும் தமிழர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறப்பட்ட தகவலை இலங்கை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இறுதிக்கட்ட போரை நடத்திய இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத்பொன் சேகாவும் இதை மறுத்துள்ளார். தமிழக அரசியல் தலைவர்கள் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் நடத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.

இந்நிலையில் 2009 மே 17 வரை இறுதிக்கட்ட போரில் பங்கேற்று சண்டையிட்ட வவுனியாவை சேர்ந்த போராளி அரவிந்தன் என்பவர் பி.பி.சி.க்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

உண்மை அறிவிப்பு என்ற பெயரில் பழ.நெடுமாறன் அவர்கள் கையெழுத்திட்டு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய எனது கருத்தை பகிர்ந்து கொள்கிறேன். அண்ணன் அவர்கள் (பிரபாகரன்) இருக்கிறாரா? இல்லையா? என்று தொடர்ந்து பேசி 14-வது ஆண்டுக்கு வந்திருக்கிறோம். இந்த நேரத்தில் நான் எல்லோருக்கும் சொல்லும் கசப்பான உண்மை என்னவெனில் அண்ணன் உயிருடன் இல்லை என்பது தான். மேலதிகமான சில விசயங்களை எங்களால் பேச முடியாது.

இது பற்றி பேசக்கூடியவர்கள் இறுதிக்கட்ட போர் களத்தில் நின்றவர்களாகவோ அல்லது அண்ணனின் பாதுகாப்பு அணியில் இருந்தவர்களாகவோ இருந்து பதிலளிப்பதுதான் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து. போராளிகள் நாங்கள் இதை ஒரு சந்தேக கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறோம்.

ஏனெனில் தற்போது இலங்கையில், பொலிஸாருக்கு தனி அதிகாரம், 13-வது சட்ட திருத்தம் என்று தீர்வு திட்டத்தை தரப்போகும் நிலையில் அதை குழப்பி விடுவதற்கான ஒரு சிலரின் செயலாகத்தான் இதை பார்க்கிறோம். அதே நேரம் புலம்பெயர் தமிழர்களிடம் அண்ணன் விரைவில் வரப்போகிறார் என்று சொல்லி நிதி சேகரித்து வருவதாகவும் அறிகிறோம்.

இது தமிழர்களுக்கு மீண்டும் ஒரு தலைவர் வரக் கூடாது என்பதற்காக திட்ட மிடப்பட்ட இந்தியாவின் ‘ரா’வின் (உளவு அமைப்பு) நிகழ்ச்சி திட்டமாகத்தான் பார்க்கிறோம். காரணம் அண்ணன் என்றால் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். நான் சண்டை களத்தில் அண்ணன் அருகில் இல்லை.

ஆனால் மிக நெருங்கிய அளவில் நின்றே போரிட்டோம். எங்களோடு 800 போராளிகள் இருந்தார்கள். சண்டை களத்தில் இருந்து வீடு திரும்பியவர்களையும் அழைத்துதான் நாங்கள் சண்டையிட நேர்ந்தது. இதில் இருந்து எத்தனை பேர் தப்பினார்கள். இறந்து போனவர்களில் எத்தனை பேரின் வெற்றுடல்களை ராணுவத்தினர் எங்களிடம் அடையாளம் காட்டினார்கள்? எத்தனை உடல்களை எங்களிடம் காட்டி அடையாளம் காட்டும்படி கூறினார்கள் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியும்.

ஆகவே இதில் இருந்து தப்பி வெளிநாடு சென்றவர்களின் கருத்துக்கள்தான் முக்கியத்துவம் பெற வேண்டும். ஆனால் வெளிநாட்டு ராணுவமோ, அல்லது இந்தியாவில் இருந்து போலியாக வைக்கப்பட்டுள்ள இந்த மாதிரி கருத்துக்களோ தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் ஒரு தீர்வையோ தரப் போவது இல்லை. இது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே பார்க்கிறோம்.

அண்ணனுடைய பாதுகாப்பில் நின்றவர்கள் எல்லோரும் வெடித்து சிதறி இறந்து போனார்கள். அவர்களது உடல் பாகங்களையும், அங்கங்களையும் கொண்டு வந்து அடையாளம் காட்டியிருந்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் அண்ணன் அவர்கள் அவரது முடிவை அவரே தேடிக் கொண்டார் என்பதே என் கருத்து. நான் நேரடியாக பார்க்காத சந்தர்ப்பத்தில் அதுபற்றி கருத்து கூற முடியாத நிலை உள்ளது.

ஆனால் அங்கு என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியும். அதுபற்றிய கருத்து சொல்லக் கூடியவர்களாக போராளிகள் நாங்கள் இருக்கிறோம். காலத்துக்கு காலம் அண்ணன் வருவார் என்று சொல்வதும், அதை தொடர்ந்து நடைபெறும் விஷயங்களையும் பார்க்கும் போது தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிவிடும் செயலாகத்தான் பார்க்கிறோம்.

அதே நேரம் தமிழினத்துக்கு மீண்டும் ஒரு தலைவர் வரக்கூடாது என்பதற்கான நிகழ்ச்சி திட்டமாக யாருக்கும் அது தேவையோ! அதற்காக இவர்கள் வேலை செய்கிறார்களோ என்று தான் இதை பார்க்கிறோம். அதே நேரம் ஈழ கனவுகளுக்காக போராடியவர்கள் – அவர்களுக்கு துணை நின்றவர்கள் தான் இந்தியாவில் இருந்து பேசினார்களா என்ற சந்தேகத்தை இன்று ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களது கடந்த கால நடவடிக்கைகள் அண்ணன் இல்லை என்பதை மட்டும் உறுதியாக கூறிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

#SriLanka #India

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version