அரசியல்

உள்ளூராட்சி தேர்தல் – மனு இன்று பரிசீலனை

Published

on

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு, இன்றையதினம் (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மனுகுறித்த அடுத்த கட்ட பரிசீலனை பெப்ரவரி 23ஆம் திகதி இடம்பெறும் என்று பெப்ரவரி 10ஆம் திகதியன்று நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் தனது மனுவை முன்னைய திகதியில் அழைக்குமாறு ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் தனது சட்டத்தரணிகள் ஊடாக, கடந்த 14ஆம் திகதி கோரிக்கை விடுத்தமைக்கு அமைய, மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நீதியரசர்களான எஸ்.துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள், பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக பெயரிட்டு, ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவினால் இந்த மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முழு நாடும் நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றும் பொது மக்கள் மீது சுமையை ஏற்படுத்தும் என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறைந்தது 1000 கோடி ரூபாயை 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து தேர்தலுக்காக ஒதுக்க வேண்டி வரும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தேர்தல் ஆணைக்குழுவிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு இவ்வளவு தொகை கிடைக்குமா என்ற கேள்விக்கு, வருமானம் மற்றும் கடன்வாங்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்தே பணி முன் செலவு நிதியை விடுவிப்பதாக அமையும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் மீது தேவையற்ற செல்வாக்கை செலுத்த முயல்வதாகவும் அரசியல் நோக்கங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களினால் சீர்குலைக்கும் காரணிகள் இருப்பதாகவும் மனுதாரர் அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version