இலங்கை

வியட்நாமிலிருந்து நாடு திரும்பினார் இலங்கையர்கள்!!

Published

on

வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 152 பேர் நேற்றிரவு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

இவர்கள் இன்றைய தினம் தத்தமது வீடுகளுக்கு அனுப்பப்படவுள்ளதாக குடிப்பெயர்வாளர்களுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையர்கள், சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடாவுக்கு செல்ல முயற்சித்தபோது, கடந்த நவம்பர் 8ஆம் திகதி அவர்கள் பயணித்த கப்பல் பழுதடைந்தது.

இதனையடுத்து ஜப்பானிய கப்பல் ஒன்றினால் அவர்கள் மீட்கப்பட்டு வியட்நாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். மீட்கப்பட்ட 303 இலங்கையர்களையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு இலங்கையர்கள் தமது உயிரை மாய்க்க முயற்சித்தனர்.

அவர்களில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, அவரது சடலம் நீண்ட நாட்களின் பின்னர் கடந்த 17ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு மீதமிருந்த 302 பேரில் 152 பேர் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு இணக்கம் வெளியிட்டனர்.
இந்தநிலையில் குறித்த 152 பேரும் விசேட விமானம் ஒன்றின் ஊடாக நேற்றிரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

வியட்நாம் நேரப்படி மாலை 5 மணியளவில் இலங்கை நோக்கி புறப்பட்ட அவர்கள் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version