இலங்கை

ரோஹிங்யா அகதிகள் யாழ் சிறையிலிருந்து மாற்றம்

Published

on

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா அகதிகள், மிரிஹான  தடுப்பு முகாமுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் படி இன்று (22) வியாழக்கிழமை   காலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 104 ரோஹிங்யா அகதிகள் இரண்டு பேருந்துகள் மூலம் மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்யா இன முஸ்லிகள் பங்களாதேஷில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம்  இந்தோனேசியாவுக்குச் தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக  பயணித்தபோதே யாழ்ப்பாணம் மருதங்கேணி அருகே நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்தனர்.

இவ்வாறு தத்தளித்தவர்கள் 2022 டிசெம்பர் 17ம் திகதி  இலங்கை  கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு  டிசெம்பர் 18ம் திகதி கடற்படையினரின் படகு மூலம்  காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.

சட்டத்துக்கு புறம்பாக இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 104 பேர் மற்றும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக நாடு கடத்த முற்பட்ட வலையமைப்புக்கு உதவியவருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

105 பேரும் தடுத்து வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று டிசம்பர் 19ம் திகதி மாலை விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்ற நீதிவான்  காயத்திரி சைலவன்,104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்டதுடன் அகதிகள் அனைவரையும் மீரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன், நாடொன்றுக்கு 104 பேரையும் கடத்த முயற்சித்தார் என குற்றச்சாட்டப்பட்ட நபரை  2023 ஜனவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையிலேயே டிசெம்பர் 19ம் திகதி இரவு 8 மணியளவில் தற்காலிகமாக 105 பேரும்  யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டு 104 பேரை மிரிஹானவுக்கு அனுப்ப இன்று (22)  நடவடிக்கை எடுக்கப்பட்டது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version