அரசியல்

சர்வதேசத்தை பேச்சுக்கு அழைக்கிறார் செல்வம் எம் .பி

Published

on

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை தொடருமானால் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை தேவை என்பது எமது பிரதான கோரிக்கையாக இருக்கும் என்று தெரிவித்த வன்னி மாவட்ட பாராளுமன்ற செல்வம் அடைக்கலநாதன், இல்லாவிட்டால் எம்மை வைத்து தங்கள் நலனை பார்க்கும் பேச்சாக அமைந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

வவுனியாவல் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

“5 தமிழ் கட்சிகள் சம்பந்தர் தலைமையில் கூடி சில தீர்மானங்களை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தோம். அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் கோரிக்கையை முன்வைத்தோம்.

நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு ஏற்கனவே அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீள ஒப்படைக்கப்படவேண்டும் எனவும் அதிகார பகிர்வு சம்பந்தமாக அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை அமுல்படுத்தி மாகாணசபை தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.

சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் சமஸ்டி அடிப்படையில் அதி உச்ச அதிகார பகிர்வுடனான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்த ஒழுங்கு முறை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதையும் நாம் வரவேற்கின்றோம் என்ற கோரிக்கைகள் அடங்கிய செய்தியை ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தோம்.

இந்த அடிப்படையிலேயே நாம் பேசலாம் என்று இருக்கும் அதேவேளை, இந்த கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் போதுதான் பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியும் எனவும் கூறியிருக்கின்றோம்.

அதைவிட சட்டத்தில் உள்ள மாகாணசபை முறைமை அதிகாரங்களோடு பகிரப்படும்போதுதான் எங்களுக்கு தற்போது உள்ள பிரச்சனைகளை நிறுத்த முடியும் என்ற அடிப்படையில் மாகாணசபை தேர்தலை இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ள சகல அதிகாரங்களோடும் நடத்தவேண்டும்.

அதிகாரங்கள் பகிரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க உள்ளோம்.

இனப்பிரச்சனை தொடர்பாக மஹிந்த காலத்தில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றது. நல்லாட்சி காலத்திலும் பேச்சு தொடரப்பட்டாலும் ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமருக்கும் பிரச்சனை வந்ததால் தட்டிக்கழிக்கும் முனைப்பு இருந்தது.

தற்போதும் இந்த பேச்சுவார்த்தை ஐ.நா சபையின் தீர்மானம், உலக நாடுகளின் அழுத்தம் அல்லது பொருளாதார பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான செயற்பாடாக இதனை காரணம் காட்ட இந்த பேச்சு இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.

இருந்தாலும் பேச்சுக்கு சென்று எமது நிலைப்பாட்டை சொல்ல வேண்டிய கடப்பாட்டில் நாம் உள்ளோம். இல்லாவிட்டால், அவர்கள் பேச்சுக்கு வராததால் எம்மால் எதனையும் செய்ய முடியவில்லை என நல்ல பெயரை எடுக்கும் சந்தர்ப்பமும் அரசாங்கத்துக்கு உள்ளது.

இதுவரை காலம் அரசாங்கங்களோடு இனப் பிரச்சனை விடயத்தை பேசி வந்து நாம் ஏமாற்றப்பட்டவர்கள். இந்த பேச்சுவார்த்தை தொடருமாக இருந்தால் இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவின் மேற்பார்வை இருக்க வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கையாக இருக்கும்.

இல்லாவிட்டால் எம்மை வைத்து தங்கள் நலனை பார்க்கும் பேச்சாக அமைந்துவிடும். அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த விட முடியாது” எனவும் அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version