இலங்கை

யாழில் சங்கிலித் திருடர்கள் கைது!

Published

on

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீண்ட நாள்களாக பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த சங்கிலித் திருடர்கள் மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராக 40 இற்கும் மேற்பட்ட பிடியாணைகள் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 60 இற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையிலும் பொலிஸாரால் சந்தேக நபர்களைக் கைது செய்ய முடியாதிருந்தது.

இந்தநிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் சந்தேக நபர்களை இன்று கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி, தலைமை பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்ஸிஸ் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர்கள் பிரதீப், மேனன் மற்றும் கொன்ஸ்டாபிள்களான கவியரசன், புவனச்சந்திரன், சுயந்தன், சம்பத், அரஹம், அசாத், யோசப், பிரவீன், கரன், பெண் பொலிஸ் கொன்ஸ்டாபிள் வர்ணகுலசூரிய ஆகியோரைக் கொண்ட குழுவே சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளது.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் பெண்கள் மற்றும் வயோதிபர்களை இலக்கு வைத்து கத்தி முனையில் அச்சுறுத்திச் சங்கிலி அறுக்கும் சம்பவங்கள் அதிகரித்திருந்தன.

இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியிருந்த நிலையில், சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை. அதையடுத்து யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் 42 மற்றும் 43 வயதான சந்தேக நபர்கள் இருவர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். நாவற்குழி மற்றும் அல்வாயைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதன்மை சந்கேக நபரான சின்னவன் என்பவர் மீது 15 திகதியிடப்படாத பிடியாணைகளும், 8 பிடியாணைகளும் மற்றைய சந்தேக நபரான ஜெயா என்பவர் மீது 5 திகதியிடப்படாத பிடியாணைகளும், பருத்தித்துறை நீதிமன்றில் 10 பிடியாணைகளும், மேல் நீதிமன்றில் ஒரு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

சந்தேக நபர்களிடம் இருந்து கோப்பாய் பகுதியில் வழிப்பறிக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும், நெல்லியடியில் திருடப்பட்டு வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கோப்பாய், நெல்லியடி, கொடிகாமம் ஆகிய இடங்களில் வழிபறி செய்யப்பட்டது என்று நம்பப்படும் 3 சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டன.

அதேநேரம், சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நகைக்கடை உரிமையாளர் ஒருவரும் பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நுட்பமான முறையில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி, வீதியில் செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும், கடந்த 3 மாதங்களாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடந்த வழிப்பறிக் கொள்ளைகளுடன் இவர்களுக்குத் தொடர்பு உண்டு என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version