இந்தியா
கைக்குழந்தையுடன் இலங்கையர்கள் போராட்டம்!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியர் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டி அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய கோரி இலங்கை தமிழர்கள் தொடர்ந்து பல மணி நேரம் முகாம் நுழைவாயில் அமர்ந்து கைக்குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு முகாமிற்குள் சென்றனர்.
இலங்கையில் ஏற்பட்ட இறுதி கட்ட போரின் போது தங்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்காக இலங்கையில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் பலரும் தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் தஞ்சம் அடைந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மண்டபம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளனர்.
அதேபோல் இலங்கை தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அடைக்கலம் தேடி தமிழகத்திற்கு அகதிகளாக வரும் சுமார் 200 பேர் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியர் சிவக்குமாரி என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும், அவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மறுப்பதாகவும், இலங்கைத் தமிழர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் வழங்கவும், தனி பதிவு வழங்கவும் லஞ்சம் கேட்பதாக மண்டபம் மறு வாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் இது குறித்து இலங்கை தமிழர் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் மற்றும் ராமநாதபுரம் ஆட்சியரிடம் பல முறை புகார் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கும்மிடிப்பூண்டி முகாமில் இருந்து பிரசவத்திற்காக மண்டபம் முகாமில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு வந்த குடும்பத்தை கைக்குழந்தையுடன் முகாமை விட்டு வெளியே அனுப்பியதாகவும், மண்டபம் முகாமிற்குள் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் நான்கு சக்கர வாகனத்தை முகாமிற்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை என உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதனை கண்டித்து உடனடியாக மண்டபம் முகாம் தனித்துணை ஆட்சியர் உடனடியாக மாற்ற கோரி நூற்றுகணக்கான இலங்கை தமிழர்கள் மண்டபம் முகாம் நுழைவு வாயிலின் தரையில் அமர்ந்து கைக்குழந்தையுடன் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் மற்றும் மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள் தர்ணாவில் ஈடுபட்ட இலங்கை தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தனித்துணை ஆட்சியரை மாற்றி உத்தரவிட்டால் மட்டுமே தர்ணா போராட்டத்தை கைவிடுவதாக திட்டவட்டமாக தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்று தனித்துணை ஆட்சியர் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பெயரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசலில் சுமார் நூற்றுக்கணக்கான இலங்கை தமிழர்கள் கைக்குழந்தைகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
#India
You must be logged in to post a comment Login