அரசியல்

கொள்கை சார்ந்தா, நபர் சார்ந்தா முடிவுகள் எடுப்பது?

Published

on

அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான செவ்வி ஒன்றில் சுமந்திரன் யாருடனும் கலந்தாலோசிக்காமல் தானாகவே முடிவுகளைஎடுப்பதாகவும் இனிவரும் காலங்களில் திரு.சுமந்திரனின் முடிவை ஏற்கமாட்டோம் என்றும் அவரது முடிவுகளுக்கு எதிராகவே செயற்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் முன்னர் அவ்வாறே செயற்பட்டதாகவும் கூறியிருந்தார்.

சிறீதரனின் கூற்று தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணைச்செயலாளரும் வடக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வியமைச்சருமான கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது சுமந்திரனுக்கு ஆதரவளிப்பதால் நான் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை என்று சொன்ன சிறீதரன் இன்று இந்த முடிவிற்கு வந்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறீதரனின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணைச்செயலாளர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் டான் தொலைக்காட்சிக்கு வழங்கியிருந்த செவ்வி ஒன்று கடந்த 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7மணிக்கு அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இதன் சில பகுதிகள் சமூக ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.

அரசியல் யாப்பின் 22ஆவது திருத்தத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு வாக்களித்தமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சிறீதரன் முடிவுகளை கலந்து பேசாமல் சுமந்திரன் தானே எடுத்துவிட்டு அவற்றை எம்மீது திணிக்க முயல்கிறார் என்று கூறியிருந்தார்.

இதனால் எதிர்காலத்தில் அவர் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராகச் செயற்படப்போவதாக எம்மில் பெரும்பாலோர் தீர்மானித்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார். இதனைக் கூறும்போது முன்னர் கூட்டமைப்பின் பேச்சாளராகச் செயற்பட்ட சுரேஷ் பிரேமச்சந்திரனும் அவ்வாறே நடந்துகொண்டார் என்றும் ஆனால் அவை பாரதூரமானவையல்ல என்றும் சுமந்திரனின் செயற்பாடுகள் அவரைவிட மோசமானவை என்ற பொருள்படவும் தெரிவித்திருந்தார்.

இது ஒரு மாணவனை நீங்கள் பரீட்சையில் ஏன் தேர்ச்சி பெறவில்லை என்று பெற்றோர் கேட்டதற்கு அந்த மாணவன் பக்கத்து வீட்டுப் பையனும் தேர்ச்சிபெறவில்லை என்று சொன்னதைப்போல் உள்ளது. இது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது.

எமது கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராகவே செயற்பட்டிருந்தார். ஆனால் சுமந்திரன் இன்று தமிழரசுக் கட்சியின் பேச்சாளராகவும் கூட்டமைப்பின் பேச்சாளராகவும் தனக்குத் தானே முடிசூட்டிக்கொண்டு செயற்பட்டுவருகின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரந்துபட்ட கொள்கை சட்டகத்திற்குள்ளேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது உத்தியோக பூர்வ பேச்சாளர் கடமைகளை ஆற்றிவந்தார். கலந்துபேசி முடிவெடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் அவர் தன்னிச்சையாக என்றும் தனது கருத்துகளை கூட்டமைப்பின் கருத்தாக வெளியிட்டது கிடையாது.

மாறாக, உத்தியோகபூர்வ பேச்சாளராகவும் அங்கத்துவக் கட்சியின் தலைவராகவும் இருக்கக்கூடிய சுரேஷ் பிரேமச்சந்திரனுடனோ ஏனைய அங்கத்துவக் கட்சிகளுடனோ கலந்து பேசாமல், திருவாளர்கள் சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் தாமே முடிவுகளை எடுத்து அதனை கூட்டமைப்பின் முடிவாக ஊடகங்களுக்கு அறிவித்த சம்பவங்கள் ஏராளம். கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் என்ற வகையிலும் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியின் தலைவர் என்ற வகையிலும் அவர்களது செயற்பாடுகள் எமது தலைவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

அங்கத்துவ கட்சிகளுக்கு உடன்பாடில்லாத முடிவுகளை எடுத்துவிட்டு அவற்றை அங்கத்துவ கட்சிகளின்மீது திணிக்கின்ற நடைமுறைகளுக்கு எதிராக ஈபிஆர்எல்எவ் மட்டுமே ஓங்கிக் குரல்கொடுத்து வந்தது. அங்கத்துவ கட்சியின் தலைவர் என்ற வகையில், சம்பந்தன், சுமந்திரன் போன்றோரின் இத்தகைய செயற்பாடுகளை கூட்டமைப்பிற்குள் விமர்சித்தபோதிலும் அதில் தீர்வு கிட்டாமையால், வெளியில் வந்து அவர்களது தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை சுட்டிக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் எமது கட்சிக்கு ஏற்பட்டது.

உண்மைகள் இவ்வாறிருக்க, திருவாளர் சிறீதரன் போக்கடிப் போக்கில் பொய்யாகவும் பிழையாகவும் பொறுப்பின்றிப் பேசியிருக்கிறார். சுமந்திரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பேச்சாளராக இருப்பதன் மூலம், தனது முடிவுகளை கட்சியின் முடிவுகளாகவும் கூட்டமைப்பின் முடிவுகளாகவும் தான்தோன்றித் தனமாக வெளியிட்டு வருகின்றார் என்று கூட்டமைப்பினர் கருத்து வெளியிட்டு வருகின்றமை கண்கூடு.

இன்று சுமந்திரன் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே கலந்துபேசி முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என்ற கருத்தை சிறீதரன் பொதுவெளியில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒருபுறம் உட்கட்சிப் பிரச்சினையை பொதுவெளிக்குக் கொண்டுவருவதன் ஊடாக கட்சி என்றால் என்ன? கட்சிக்கட்டுப்பாடு என்றால் என்ன என்று தெரியாத தனது முதிர்ச்சியின்மையையும் மறுபுறம் சுமந்திரன் எடுக்கின்ற முடிவுகள் அனைத்தையும் எதிர்ப்போம் என்று தெரிவித்திருப்பதன் மூலம் கொள்கை அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்வதை விடுத்து, நபர்கள்சார்ந்து முடிவெடுத்திருப்பதானது சிறீதரனின் அடிப்படை அரசியல் அறிவை கேள்விக்குள்ளாக்குகின்றது.

நாற்பத்தாறு ஆண்டுகாலமாக தன்னை முழுநேரமாக தமிழ்த் தேசிய இனத்தின் விடிவிற்காக அர்ப்பணித்து செயற்பட்டுவரும் ஒருவரை குறித்து அவராலேயே அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒருவர் அதிலும் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருவர் சேறுபூச முற்படுவதானது படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில் என்னும் முதுமொழிக்கு ஒப்பானது என்றுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version