அரசியல்

அமெரிக்க துணைத்தூதுவர் – கூட்டமைப்பினர் சந்திப்பு

Published

on

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, இலங்கைக்கான அமெரிக்க துணைத்தூதுவருக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம் (2022.10.26) நடைபெற்றுள்ளது.

இதன்போது நாட்டின் சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்தும், தமிழ்த்தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக, ‘ஒருவருட காலத்துக்குள் அரசியல் தீர்வு’ என அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்தை மேற்கோள் காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், ஜனாதிபதியின் கூற்று நடைமுறைச் சாத்தியமானதாக இருந்தால் அது ஒற்றையாட்சிக்குள்ளான தீர்வாகவே அமையும், அத்தகைய தீர்வு ஒருபோதும் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வாக அமையாது. மாறாக அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள சமஸ்டி முறையோ அல்லது இந்தியாவில் நடைமுறையிலுள்ள மொழி அடிப்படையிலான மாநில சுயாட்சி முறையோ தான் தமிழ்த்தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வாக அமையும் என்றும், அது அமெரிக்காவினதும், இந்தியாவினதும் நேரடித் தலையீடற்று நிகழாது என்றும், அரசியல் தீர்வு விடயத்தில் ஈழத்தமிழர்கள் மனச்சோர்வுற்று, தம்மைத்தாமே மலினப்பட்ட, பெறுமதியற்ற இனமாக கருதும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம், அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் அரசியல் அலுவலர், ‘இறுதிப் போரின்போது விடுதலைப் புலிகளும் பல தவறுகளையும் குற்றங்களையும் புரிந்துள்ளனரே, அதுபற்றிய தங்களின் நிலைப்பாடு என்ன?’ என கேள்வியெழுப்பியுள்ளார்.

அதற்குப் பதிலளித்த சிறீதரன்,

அது ஒரு இனவிடுதலை கருதிய அறப் போராட்டம், ஆனால் ஒரு இனத்தின் விடுதலைக்கான இயலுமைகள் எல்லாவற்றையும் இழந்து கையறு நிலையில் நின்றபோது, தவிர்க்க முடியாத சிலமுடிவுகளை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருந்திருக்கலாம், அந்த நோக்குநிலையில் நின்று பார்த்தால் அதிலுள்ள நியாயப்பாடுகளைப் புரிந்துகொள்கின்ற காலம் வரும். அமெரிக்கா, நெல்சன் மண்டேலாவுக்கெதிராக விதித்த தடையை மீளப்பெற்றது போல, ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தடைசெய்யப்பட்ட தலிபான்களிடமே மீள ஒப்படைத்ததைப்போல, சில நாடுகள் விடுதலைப்புலிகள் மீதான தடையை தற்போது நீக்கியுள்ளதைப் போல எதிர்காலத்தில் நிலைமை மாற்றமடையும் எனத் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version