இலங்கை
வல்லையில் தொடரும் வழிப்பறி கொள்ளை – பொலிஸார் பாராமுகம் என குற்றச்சாட்டு!
யாழ்ப்பாணம் வல்லை வெளி பகுதியில் தொடர் வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்று வரும் நிலையில் அச்சுவேலி பொலிஸார் பாராமுகமாக உள்ளதாக பல தரப்பினராலும் குற்றம் சாட்டப்படுகிறது.
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆள் நடமாட்டம் குறைவான வல்லை வெளி பகுதியில் மாலை மற்றும் முன்னிரவு வேளைகளில் மோட்டார் சைக்கிள்களில் நடமாடும் வழிப்பறி கொள்ளையர்கள் பெண்களை இலக்கு வைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளை யாழ்ப்பாணத்தில் இருந்து , பருத்தித்துறை பகுதிக்கு வல்லை வெளி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிப பெண்ணின் 5 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு வழிப்பறி கொள்ளையர்கள் வல்லை பகுதியில் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்த வயோதிப பெண்ணின் தாலிக்கொடியை இழுத்து அறுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
அதனால் வயோதிப பெண் பயணித்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்கு உள்ளானது. அதனால் அதில் பயணித்த வயோதிப பெண் உள்ளிட்ட இருவர் காயமடைந்த நிலையில் , நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு வார கால பகுதிக்குள் ஐந்திற்கும் மேற்பட்ட வழிப்பறி
குறித்த பகுதியில் கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை குறித்த பகுதியில் வழி மறித்த வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி முனையில் அவர்களிடம் இருந்து 11 பவுண் நகை மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
அதுபோன்று வேலை முடித்து வீடு செல்லும் நோக்குடன் குறித்த பகுதிக்கு அண்மையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்ற பெண்ணொருவரின் தங்க சங்கிலி ஒன்றும் வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்து சென்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணின் சங்கிலியை பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்து சென்றனர்.
அதேவேளை குறித்த வழிப்பறியில் ஈடுபடும் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடி வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் வல்வெட்டித்துறை பகுதியில் திருடிய மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி பருத்தித்துறை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
வடமராட்சியில் பகுதியில் ஒரு வார கால பகுதிக்குள் 10க்கும் மேற்பட்ட வழிப்பறி
வடமராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் 10க்கும் மேற்பட்ட வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றத்தில் கடந்த 14ஆம் திகதி 3 பவுண் தாலி , 2 பவுண் சங்கிலி , மோட்டார் சைக்கிள் , ஐ. போன் மற்றும் 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பவற்றுடன் வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த சமயம் மறுநாள் சனிக்கிழமை குறித்த நபர் பொலிஸ் நிலைய மலசல கூட ஜன்னல் வழியாக தப்பி சென்றுள்ளார்.
தப்பி சென்ற நபரையும், அவரது கும்பலை சேர்ந்தவர்களும் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் அவர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login