அரசியல்

ஐநாவுக்கு மனோ அவசர கடிதம்!

Published

on

பெருந்தோட்ட மக்கள் நவீன கூலி அடிமை தொழிலாளர்களாகவும், தமிழ் சிறுபான்மை இனத்தவராகவும் இலங்கையில் ஒடுக்கப்படுகிறார்கள். இது தொடர்பில் சம்பந்தபட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டுமென தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத்துறையில் காணப்படும் கூலியடிமை, இன ஒடுக்குமுறை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, கொழும்பில் உள்ள ஐ.நா மனித உரிமை பிரதிநிதிக்கு மனோ கணேசன் எழுதியக் கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக மனோ கணேசன் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐ.நா விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபோகாடாவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டால், அடுத்த ஐ.நா மனித உரிமை ஆணைகுழு கூட்டத்தில் இவ்விவகாரம் எடுத்தாளப்பட உரிய அவகாசம் கிடைக்கும் எனவும் மனோ தெரிவித்துள்ளார்.

“நவீன அடிமைத்தனங்கள், அதன் மூல காரணங்கள் மற்றும் தொடர் விளைவுகள் ஆகிய விவகாரங்களுக்கான, ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின், விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபோகாடா ஐ.நா மனித உரிமை ஆணைகுழுவின் கடைசி கூட்டத்துக்கு சமர்பித்த அறிக்கையின்படி பின்வரும் பாரதூரமான நிலைமைகள் பெருந்தோட்ட சமூகத்தின் மத்தியில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

1)மனிதர் வாழ தகைமையற்ற வாழ்விடங்கள்,
2)அரைகுறை சுகாதார நிலைமைகள்,
3)போஷாக்கின்மை, வறுமை,
4)பெண்கள் மீதான அதீத சுமை,
5)சிறுவர் தொழிலாளர்,
6)வேலைத்தள விபத்துகளுக்கு முறையான நஷ்ட ஈடின்மை,
7)முறையற்ற வேலை நிலைமைமைகள்,
8)அதிக நேர வேலை குறை வேதனம்,
9)நவீன அடிமைத்தன வடிவங்கள்,
10)அதி சுரண்டல் பாரபட்சம்,
11)உடல்ரீதியான,
12)பேச்சுரீதியான பாலியல்ரீதியான துன்புறுத்தல்,
13)வீட்டு வேலை,
14)பாலியல் வேலை, கொத்தடிமை வேலை,
15)தனியார் நிறுவன தோட்டங்களில்,
16)அரச நிறுவன தோட்டங்களில், சிறு உடைமையாளர் தோட்டங்களில் நியாயமற்ற நாட்கூலி முறைமை,
17)தரமான கல்வி பெற வாய்ப்பின்மை,
18)மொழி பிரச்சினை,
19)அதிக தொகை பாடசாலை விடுகை,
20)உள்ளூர் தேசிய தொழில் சட்ட கண்காணிப்பு இன்மை,
21)துணைக்கு வரும் சிவில் அமைப்புகள் மீதான கண்காணிப்பு தொல்லை.

பெருந்தோட்ட சமூகம், இலங்கையில் வாழும் மலையக தமிழரில் ஒரு அங்கம். ஆகவே பெருந்தோட்ட சமூகத்தின் மீதான ஒடுக்கு முறைக்கு அவர்கள் சிறுபான்மை தமிழராக இருப்பதும் ஒரு காரணமாகும். அடுத்தது அவர்கள் மீதான நவீன கூலித்தொழில் அடிமைத்தனமாகும்.

இந்நிலையில் அரசியல் தலைமைகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், அரசு தரப்பு, தோட்ட நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றுடன் பெருந்தோட்ட துறையில் நிகழும் நவீன கூலியடிமை, இன அடிமைத்தனம் ஆகியவை தொடர்பில் கலந்துரையாடும்படி கோருகிறேன்.” எனவும் மனோ தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version