அரசியல்

எங்கள் பிள்ளைகள் தான் வேண்டும்! 

Published

on

நாங்கள் தொலைத்தது ஆடு,மாடுகளை இல்லை எமது பிள்ளைகளையே. நாங்கள் கையில் ஒப்படைத்த,வீடுகளில் வந்து பிடித்துச் சென்ற எமது பிள்ளைகளையே கேட்கிறோம் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு 2 இலட்சம் ரூபாய் பணமும் மரண சான்றிதழும் வழங்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது .ஏற்கனவே ஒரு இலட்சம் ரூபாய் வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.

தற்போது அதற்கு வட்டியுடன் சேர்த்து 2 லட்சம் தருவதாக கூறுகின்றனர்.நாட்டில் ஏற்பட்ட இனப்படுகொலைக்கு எமது பிள்ளைகள்,உறவுகள் காணாமல் போனதற்கு காரணம் தற்போதைய ஜனாதிபதி. ஆட்சிக்கு வருகின்ற அனைத்து அரசாங்கமும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றவும் நீதியை பெற்றுத்தர வும் செயல்படவில்லை. அவர்கள் தமது அரசினையும், இராணுவத்தையும் பாதுகாப்பதற்காக போர்க்குற்றத்தை மேற்கொண்டவர்களுக்கே பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இந்த அரசாங்கமும் அதனையே செய்து வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக தாய்மார் வீதிகளில் நின்று போராடி வருகின்றனர். கையில் ஒப்படைக்கப்பட்ட,கண் முன்னே பிடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை தேடி நாங்கள் வீதியில் நின்று போராடி வருகிறோம்.சுமார் 2 ஆயிரம் நாட்களையும் தாண்டியுள்ளது எமது போராட்டம்.

எமக்கு நீதி வேண்டும்.எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது?என்றே நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.நாங்கள் அரசிடம் நிதி கேட்கவில்லை.இவர்கள் வழங்கவுள்ள 2 இலட்சத்தையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

நாங்கள் தொலைத்தது ஆடு,மாடுகளை இல்லை.எமது பிள்ளைகளையே! இந்த சூழ்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளார்.குறித்த ஆணைக்குழு வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிடம் விசாரணைகளை முன்னெடுக்க உள்ளனர்.

இனியும் அவர்கள் என்ன விசாரணைகளை மேற்கொள்ள போகிறார்கள்? அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட, இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட எமது உறவுகளை ஒப்படைக்கும் படியே நாங்கள் கோருகிறோம்.

எமது பிள்ளைகள் எங்கே? என்ன நடந்தது என்றே கேட்கின்றோம்.எங்களையும் ஏமாற்றி உலக நாடுகளையும் ஏமாற்றி ஜெனிவா கூட்டத்தொடர் இடம் பெறுகின்ற போது ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக விடையங்களை சமர்ப்பிக்கின்றனர்.

எமது பிள்ளைகளை கொலை செய்து விட்டு 2 இலட்சம் ரூபாய் பணத்தையும் மரண சான்றிதழையும் வழங்க இந்த அரசு எத்தனிக்கிறது.நீங்கள் எங்களுக்கு 2 இலட்சம் தர வேண்டாம்.நாங்கள் உங்களுக்கு 4இலட்சம் தருகிறோம். எங்களது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று கூறுங்கள்.”என அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version