இலங்கை

யாழில் இவ் வருடத்தில் மட்டும் 2,548 நோயாளர்கள்!

Published

on

யாழ். மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2,548 நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் எட்டு மரணங்களும் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

கடந்த சில மாதங்களாக யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் அதிக மரணங்களும் பதிவாகின்றன. கொவிட்-19 தொற்று காரணமாக. மாகாணங்களிற்கிடையே ஏற்படுத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து காரணமாக கடந்த இரண்டு வருடங்களிலும் டெங்கு நோயாளர்கள் மற்றும் பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகும்.

யாழ். மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2,548 நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் எட்டு மரணங்களும் பதிவாகியுள்ளன. கடந்த ஐந்து வருடங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் மரணங்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டது. இவ் வருடம் நடந்த மரணங்களில் பெரும்பாலானவை நோயாளர்கள் தாமதமாக வைத்திய ஆலோசனையினை நாடியதாலேயே நிகழ்ந்துள்ளன.

எனவே காய்ச்சல் போன்ற டெங்கு நோய்க்கான அறிகுறிகளுடையவர்கள் உடனடியாக தகுதி வாய்ந்த மருத்துவர் ஒருவரையோ அல்லது வைத்தியசாலைகளினையோ நாடி உரிய வைத்திய ஆலோசனையைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

டெங்கு நோயினை கட்டுப்படுத்துவது தொடர்பாக செப்டெம்பர் மாதம் 30ம் திகதி அரச அதிபர் தலைமையில் யாழ் மாவட்ட டெங்கு தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

அவ்வாறே எதிர்வரும் வாரத்தில் பிரதேச மட்ட டெங்கு தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டங்கள்,பிரதேச செயலர் பிரிவு வாரியாகவும் கிராமிய மட்டங்களில் கிராம சுகாதார மேம்பாட்டு குழு கூட்டங்களும் இடம்பெறும்.

இனிவரும் மாதங்களில் யாழ் மாவட்டம் பருவப்பெயர்ச்சி மழையினை அதிகம் பெறும் காலமாகும். எனவே இம்மாதங்களில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். பருவப்பெயர்ச்சி மழையுடன் ஏற்படக்கூடிய டெங்கு பெருந்தொற்றினைத் தடுப்பதற்கு வாராந்தம் உறுதி செய்யப்படும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்.

எனவே நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை டெங்கு பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாகக் கருத்தில் கொண்டு எதுவித காலதாமதமும் இன்றி சமூக பங்களிப்புடன் நுளம்புகள் உருவாகும் மூலங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

இதனைக் கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சானது நாடு முழுவதும் அதிக ஆபத்துள்ள பிரதேச செயலர் பிரிவுகளில் விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுக்கின்றது. இது தொடர்ச்சியாக முன்று நாட்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

முதலாவது டெங்கு கட்டுப்பட்டு நிகழ்ச்சித் திட்டம் ஒக்டோபர் 3ம் திகதி முதல் 5ம் திகதி வரை சங்கானை, கரவெட்டி, ஊர்காவற்துறை, நல்லூர், சண்டிலிப்பாய், மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில்; முன்னெடுக்கப்பட உள்ளது. அவ்வாறே எதிர்வரும் ஒக்டோபர் 12ம் திகதி முதல் 14 ம் திகதி வரை சாவகச்சேரி, கோப்பாய், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் இடம்பெறவுள்ளது.

இதன்போது சுகாதார உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப் படையினர். பொலிஸ், கிராம உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுக்கள் அதிக டெங்கு ஆபத்து உள்ளதென அடையாளம் காணப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள அரச தனியார் நிறுவனங்கள், மத ஸ்தலங்கள், பாடசாலைகள் , உயர் கல்வி நிறுவனங்கள், வீடுகள், தொழிற்சாலைகள், கட்டடநிர்மாணங்கள் நடைபெறும் இடங்கள், மற்றும் மீன்பிடி துறைமுகங்கள் என்பனவற்றிற்கு நுளம்புகள் பெருகக்கூடிய ஆபத்துள்ள இடங்களை அடையாளம் காணும் நோக்கத்துடன் பரிசோதிப்பதற்காக வருகை தருவர்.

எனவே உங்கள் வீட்டின் உட்பகுதிகளிலும், வெளிச் சுற்றாடலிலும் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் உள்ளனவா என்பதனை கிரமமாக பரிசோதனை செய்வதுடன் அவற்றை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவும். அரச தனியார் நிறுவனங்களின் பொறுப்பதிகாரிகள் தமது நிறுவனங்களில் கூட்டு முயற்சியாக சிரமதான பணிகளை முன்னெடுக்கவும்.

மேலும் கைவிடப்பட்ட காணிகள், வீடுகள் என்பனவற்றின் உரிமையாளர்கள் அவற்றை துப்பரவாக பேணுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன், அவ்வாறான இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய ஆபத்துகள் காணப்படுமாயின் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

டெங்கு நோயிலிருந்தும் அதனால் ஏற்படக்கூடிய மரணங்களில் இருந்தும் எம்மையும் எமது சமுகத்தையும் பாதுகாக்க ஒன்றிணைவோம் – என்றுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version