இலங்கை
உலக உணவுத் திட்டத்தின் கீழ் விசேட கொடுப்பனவு
சகல பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், நகரங்களிலுள்ள தோட்ட சமூகத்தினருக்கும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் உலக உணவுத் திட்டத்தின் கீழ் விசேட கொடுப்பனவு வழங்கப்படவிருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் மனுஷ நாணயகார இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
புதிய கூட்டத்தொடரின் தொழில் மற்றும் வெளிநாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நகரப் புறங்களில் உள்ள தோட்ட சமூகத்தினருக்கு இதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்பொழுது காணப்படும் நெருக்கடிக்கு மத்தியில் ஜப்பான், கொரியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு அதிக தொழிலாளர்களை அனுப்புவதை ஒழுங்குமுறைப்படுத்த தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேபோன்று ஜப்பான் போன்ற நாடுகளுக்குத் தொழிலாளர்களை அனுப்புவதாகத் தெரிவித்து வகுப்புகளை நடத்தும் மோசடிக்காரர்கள் இருப்பதால் பொதுமக்கள் சரியானதைத் தேடிப்பெற்றுக் கொண்டு செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
நாளையதினம் (08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலம் இரண்டு மற்றும் வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் என்பனவும் இங்கு கருத்தில் கொள்ளப்பட்டதுடன் அவற்றுக்கான அனுமதியும் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரட்ன, வடிவேல் சுரேஷ், டி.பிஹேரத், வேலுகுமார், அரவிந்த குமார் உள்ளிட்டவர்களும், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login