அரசியல்

கைதிகள் தொடர்பில் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்!

Published

on

மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களது நிலவரம் தொடர்பாக அரசியல் கைதிகளது பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மனிதநேயத்தோடு செயல்படக்கூடிய அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் உறவினர்கள் யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே முருகையா கோமகன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நீண்ட காலமாக அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அண்மைக் காலங்களில் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் இளைஞர்கள் நேற்று கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றார்கள்.

அவர்களுடைய உறவுகள் எங்களுடன் தொடர்பு கொண்டு சிறையிலுள்ள சூழல் தொடர்பில் தவிப்புடன் இருக்கின்றார்கள்.இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் அரசியல் கைதிகளையும் மகசின் சிறைச்சாலைக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களது நிலவரம் தொடர்பாக அரசியல் கைதிகளது பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மனிதநேயத்தோடு செயல்படக்கூடிய அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

ஜனாதிபதியை தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து, எம்மால் கையளிக்கப்பட்ட பெயர் பட்டியல் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டிருந்தது. அதில் 24 பேர் தண்டனை வழங்கப்பட்டு இருக்கின்றார்கள். பத்து வழக்குகளில் 22 பேரும், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்தவர்கள் என 24 பேருமாக மொத்தம் 46 தமிழ் அரசியல் கைதிகள் காணப்படுகின்றனர். உடனடியாக 24 பேரை விடுதலை செய்ய முடியும் என ஜனாதிபதி கூறியதுடன், நீதி அமைச்சர் ஐநாவுக்கு சென்றிருப்பதால் அவர் வந்த பின்னர் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயம் ஐநா மனித உரிமை அமர்வு முடிவடைவதற்கு முன்பாக இடம் பெற வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.

இவ்விடயத்தில் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்காது செயற்பட வேண்டும். அனைவருக்கும் இதில் பொறுப்பு இருக்கின்றது. நல்லாட்சி அரசு காலத்திலும் நாம் ஏமாற்றப்பட்டு இருக்கின்றோம். அதே விடயம் இந்த காலப்பகுதியிலும் இடம்பெறுமா என்பது தொடர்பாக நாம் கவலை அடைகின்றோம்.

குற்றம் ஒப்புதல் வாக்குமூலம் என அழைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களை அன்றிரவே சட்டமா அதிபர் திணைக்களத்தால் மீண்டும் வழக்குகளை தாக்கல் செய்யப்பட்டு அதற்கான வழக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்திலும் 15 ஆம் திகதி பதுளையிலும் உள்ள நீதிமன்றத்திலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது. இவர்கள் 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்களுடன் 14 வருடங்களுக்குப் பிறகு இவ்வாறான ஒரு துன்பியல் சம்பவமொன்று இடம்பெற்றிருக்கின்றது.

அரசியல் கைதிகள் விடுதலை செய்யக்கூடாது என்ற நோக்கில் அரசாங்கம் செயற்படுகின்றதா என்பதை மீண்டும் எடுத்துக்காட்டும் சம்பவமாக இது காணப்படுகிறது. அரசாங்கத்தினுடைய இரட்டை வேடத்தை இது காட்டுகின்றது – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version