இலங்கை

அரச, தனியார் துறை தலைவர்களை உள்ளடக்கி செயலணிகள்

Published

on

சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி, முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அரச மற்றும் தனியார் துறை தலைவர்களை உள்ளடக்கிய எட்டு (08) செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

செயலணிகளை நிறுவும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

புதிய​ செயற்திட்டங்களை ஆரம்பித்தல், நிர்மாணத் துறைக்கு அனுமதி பெறுதல், வணிகச் சொத்தைப் பதிவு செய்தல், கடன் பெறுதல், சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாத்தல், நாடுகடந்த வர்த்தகம், வரி செலுத்துதல், உள்ளிட்ட 8 துறைகளின் அடிப்படையில் இந்த செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வணிக நடவடிக்கைகள் தொடர்பான சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்களால்
செயல்படுத்தப்படும் விதிமுறைகளையும், நடவடிக்கைகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த
செயலணிகள் செயற்படும்.

இந்நிகழ்வில் மேற்படி செயலணிகளின் தலைவர்கள் மற்றும் இப்பணியுடன் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 74 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,
முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் அரசாங்கத்தின் நீண்டகால முயற்சிகளில் இது மற்றுமொரு மைல்கல்லாகும் என்று குறிப்பிட்டார்.

ஆட்சி மாறும்போது அதன் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாமை வருத்தமளிக்கும் விடயம் எனவும், அவ்வாறு காலத்திற்கேற்ற, நிறுவன ரீதியான அவசிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமையினால் இன்று நாம் அவதியுற நேரிட்டுள்ளமை வருத்தமளிக்கிறது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் சியே காண்டா, நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன, இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம்.வீரகோன், ஜனாதிபதியின் சட்ட விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் பிம்பா திலகரத்ன, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி சமரதுங்க, பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சரத் ராஜபத்திரன, இலங்கை வணிக சபையின் உப தலைவர் துமிந்த ஹுலங்கம ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version