அரசியல்

இந்தியாவை அனுசரித்தே ஆக வேண்டும்!

Published

on

இந்தியாவை அனுசரித்து செல்லும் அணுகுமுறையையே இலங்கை பின்பற்ற வேண்டும். ஆளுநர்கள் நியமனத்தைவிடவும் மாகாண ஆட்சியை நிறுவுவதற்கான நகர்வுகள் சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (18.08.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பில், சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” ஆளுநர் நியமனம் சம்பந்தமாக ஐக்கிய தேசியக்கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலையில், ஆளுநர் நியமனங்களைவிட, மாகாணத்தில் மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக மாகாணங்களுக்கான அதிகாரம் என்பது ஆளுநர் ஊடாக அல்லாமல், மக்கள் ஊடாக தெரிவுசெய்யப்படும் முதல்வர் ஊடாகவே கையாளப்பட வேண்டும். அதிகாரங்களை முழுமையாக பகிரும் வகையில் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக வேண்டும்” – எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

13 ஆவது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்தாமல் இழுத்தடிக்கும் இலங்கை, தற்போது சீன கப்பலையும் நாட்டுக்குள் அனுமதித்துள்ளது. எது எப்படி இருந்தாலும் இந்தியாவை அனுசரித்து செல்லும் அணுகுமுறையையே இலங்கை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை, சர்வக்கட்சி அரசு தொடர்பில் கருத்து வெளியிட்ட ராதாகிருஷ்ணன்,

” அதற்கான பேச்சுகள் இன்னமும் வெற்றியளிக்கவில்லை. சர்வக்கட்சி அரசில் அமைச்சில் பதவிகளை ஏற்கக்கூடாது என்பதே மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு, இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரமும் இது தொடர்பில் ஆராயப்பட்டு, உறுதியான முடிவு அறிவிக்கப்படும்.” – என்று குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version