அரசியல்

அனுமதியின்றி நுழைய முடியாது..! – இடைநடுவில் காத்திருக்கும் சீனக் கப்பல்

Published

on

சீனாவின் யுவான் வாங் 5 ஆய்வு கப்பல் தனது அனுமதியின்றி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் பிரவேசிக்க முடியாது என ஹம்பாந்தோட்டை துறைமுக அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நேற்று வந்து சேரவேண்டிய யுவான் வாங் 5 கப்பல் துறைமுகத்திலிருந்து 600 கடல் மைல் தொலைவில் உரிய அனுமதிக்காக காத்திருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் அவசர சந்திப்பிற்கு சீன தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதேவேளை, சீனா கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை தவிர்க்கவேண்டும் என சீனாவை கேட்டுக்கொள்வதற்கான இராஜதந்திர முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நேற்று பிற்பகல் நிலவரப்படி, கப்பல் சுமார் 650 கடல் மைல் தொலைவில் இருந்ததாகவும், கப்பல் தொடர்பில் வெளியுறவு அமைச்சு மற்றும் துறைமுக அதிகாரசபை ஆகியவை பணிபுரிந்து வருவதாகவும் அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன யுவான் வாங்-5 கப்பல் நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இலங்கைக்கான சீன தூதுவரிடம் அரசாங்கம் கோரியுள்ளது.

மேலும், அம்பாந்தோட்டை துறைமுக அதிகார சபையினால் இன்று குறித்த கப்பல் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை இறையாண்மை கொண்ட நாடாக இருப்பதால், தேவையான வெளிநாட்டு உறவுகளைப் பேண அனுமதிக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.

இந்த சீன கப்பல் இலங்கைக்கு செல்வதற்கு ஆரம்பம் முதலே இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்
இந்த கப்பல் விவகாரம் இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் இரண்டு தினங்களில் யுவான் வாங் 05 கப்பல் ஹம்பாந்தோட்டையை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது.சீனாவின் இந்த கப்பல் ஆராய்ச்சி கப்பல் என அடையாளப்படுத்தப்பட்டாலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பெலஸ்டி ஏவுகணை மற்றும் செய்திமதிகளை ஏவுதல், கண்காணித்தல் ஆகிய வசதிகள் இருப்பதன் காரணமாக தமது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கலாம் இந்தியா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் கடும் அதிருப்தியின் காரணமாக, இலங்கையின் வெளி விவகார அமைச்சு, கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு அனுப்பி வைத்திருந்த செய்திக் குறிப்பில், மேலும் ஆலோசனை செய்யப்படும் வரை யுவான் வாங் 5 கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை ஒத்திவைக்குமாறு கோரியிருந்தது.இந்தியாவின் எதிர்ப்பையும் இலங்கையின் கோரிக்கையும் மீறி குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது.

இருப்பினும், சீனாவின் யுவான் வாங் 5 ஆய்வு கப்பல் தனது அனுமதியின்றி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் பிரவேசிக்க முடியாது என துறைமுக அதிகாரி தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version