இலங்கை

கல்வி அமைச்சர் தலைமையிலான குழு கிளிநொச்சி விஜயம்

Published

on

கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த தலைமையிலான உயர்மட்டக் குழு அடுத்த வாரம் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்ங்களுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த, கல்வி அமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோருடன் கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரே எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சிக்கும், 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

18 ஆம் திகதி வியாழக் கிழமை, முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி, அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதியின் வைபவ ரீதியான திறப்பு விழா இடம்பெறவுள்ளது.

அரசாங்கத்தின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 525 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்தக் கட்டடத் தொகுதியை கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம் ஜெயந்த திறந்து வைக்கவுள்ளார்.

யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கல்வி அமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

மறுநாள் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள திறந்த பல்கலைக் கழக பிராந்திய நிலையத்திலும் கட்டடமொன்றைக் கல்வி அமைச்சர் திறந்து வைக்கவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், நிதியாளர் மற்றும் பீடாதிகளுடன் கலந்துரையாடவுள்ள இந்தக் குழு யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகக் கல்வியின் இன்றைய நிலை மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version