இலங்கை

பிரியா- நடேசலிங்கம் குடுப்பத்துக்கு நிரந்தர விசா வழங்கியது அவுஸ்திரேலியா

Published

on

அவுஸ்திரேலியாவில் 4 ஆண்டுகளாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த பிரியா- நடேசலிங்கம் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்துக்கு அவுஸ்திரேலியா நிரந்தர விசா வழங்கியுள்ளது.

குறித்த குடும்பத்தை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் கடந்த அரசாங்கத்தால் இடம்பெற்று வந்த நிலையில், கடந்த மே மாதம் ஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் இக் குடும்பத்துக்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு, பிலோலா எனும் பகுதியில் வாழ அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், தமிழ் அகதி குடும்பத்தினரை பார்வையிட்ட அவுஸ்திரேலிய உள்துறை அதிகாரிகள், அவர்களுக்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் என அவுஸ்திரேலியாவின் ஏபிசி ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

“இவ் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் தலையிட்டு தனது அதிகாரங்களை பயன்படுத்தி, இக் குடும்பத்தில் உள்ள நான்கு பேருக்கும் நிரந்தர விசாக்களை கொடுத்துள்ளதாகதெரிவித்தனர்” என இக் குடும்பத்தின் விடுதலைக்காக செயல்பட்ட ஏஞ்சலா ஃபிரடெரிக்ஸ் தெரிவித்திருக்கிறார்.

2012 இல் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி, அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 இல் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்துகொண்டனர்.
அவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் உள்ளன.

அவுஸ்திரேலியாவின் பிலோலா நகரில் வசித்து வந்த அவர்களின் விசா, 2018ஆல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு, மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர்.

அவர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் முயற்சி நீதிமன்ற தலையீட்டால் தடுக்கப்பட்ட போதிலும் நான்கு ஆண்டுகள் குடிவரவுத் தடுப்பில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டடமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version