இந்தியா

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றி தமிழகம் அனுப்பிய கடற்படையினர்!

Published

on

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றி தமிழகம் அனுப்பிய கடற்படையினர்!

நடுக்கடலில் பழுதாகி நின்ற ராமேஸ்வரம் மீன்பிடி விசைப் படகை மீனவர்களுடன் மீட்ட இலங்கை கடற்படையினர் படகின் பழுதை சரி செய்த பின் படகில் இருந்த மீனவர்களுக்கு உணவளித்து அவர்களை ராமேஸ்வரம் திருப்பி அனுப்பினர்.

கடந்த சனிக்கிழமை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப் படகில் 6 பேர் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் திடீரென படகில் உள்ள இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகில் கடல் நீர் புக ஆரம்பித்தயைடுத்து படகு மெல்ல மெல்ல கடலுக்குள் மூழ்க தொடங்கியது.

அதை கவனித்த அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் உடனடியாக மீனவர்களை பத்திரமாக மீட்டு படகில் ஏற்பட்ட எஞ்சின் கோளாறு சரி செய்ய முயற்சி செய்தனர்.

ஆனால் கடற்படை வீரர்களின் முயற்சி தோல்வியில் முடிந்ததால் உடனடியாக மன்னார் கடற்படை முகாமில் இருந்து மெக்கானிக்கை வரவழைத்து படகை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர். ஆனால் தொடர்ந்து இலங்கை கடற்படை எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

உடனடியாக இலங்கை கடற்படை வீரர் ஒருவர் ராமேஸ்வரத்தில் உள்ள விசைப்படகு உரிமையாளர் செல்போன் எண்ணை வாங்கி வாட்ஸ்அப் மூலமாக ´நான் இலங்கை கடற்படை வீரர் பேசுகிறேன், உங்களுடைய படகு பழுதாகி மன்னார் கடற்படை முகாம் அருகே உள்ளது. உடனடியாக வந்து படகை மீட்டுச் செல்லுங்கள்´ என தகவல் அனுப்பியுள்ளார்.

உடனடியாக படகின் உரிமையாளர் மீனவர்களையும் படகையும் பத்திரமாக மீட்டு கொண்டு வர ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகு ஒன்றை அனுப்பினார்.

இந்நிலையில் பழுதான படகை இலங்கை கடற்படை வீரர்கள் சர்வதேச கடல் எல்லை வரை இழுத்து வந்து படகின் உரிமையாளர் அனுப்பி வைத்த படகில் மீனவர்களையும் படகையும் பத்திரமாக ஒப்படைத்தனர்.

இலங்கை கடற்பரப்பில் படகு பழுதாகி நின்ற தமிழக மீனவர்களுக்கு உணவளித்து பத்திரமாக திருப்பி அனுப்பிய நிகழ்வு ராமேஸ்வரம் மீனவர்கள் மட்டுமல்லாமல் தமிழக மீனவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் சுற்றி வளைத்தது, தங்களை படகுடன் இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து சிறையில் அடைக்க போகிறார்கள் என அச்சமடைந்திருந்த சூழலில் உணவளித்து பத்திரமாக திருப்பி அனுப்பியதற்கு இலங்கை கடற்படைக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கரை திரும்பிய மீனவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version