இலங்கை

யாழ். பல்கலையிலிருந்து துவிச்சக்கரவண்டிப் பேரணி

Published

on

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணியொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் ஆரோக்கிய நகரத் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்ட “ஆரோக்கியத்தின் பாதையில்” என்ற விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணி இன்று காலை 7 மணியளவில் ஆரம்பித்து காலை 8 மணியளவில் நிறைவடைந்தது.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டிப் பேரணி அங்கிருந்து ஆடியபாதம் வீதி வழியாகக் கொக்குவில் சந்தியை அடைந்து, அங்கிருந்து கே.கே.எஸ் வீதி வழியாக ஆஸ்பத்திரி வீதியை அடைந்து, அவ் வீதி வழியாக வேம்படிச் சந்தியை வந்தடைந்தது. அங்கிருந்து பலாலி வீதி ஊடாகப் பரமேஸ்வராச் சந்தியை அடைந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வளாகத்தின் நுழைவாயிலில் நிறைவடைந்தது.

அண்ணளவாக 10 கிலோ மீற்றர் தூரமுள்ள இந்த விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணியில்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா, மருத்துவபீட பீடாதிபதி
இ.சுரேந்திரகுமாரன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், யாழ் போதனா வைத்திசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றலுடன், பல்கலைக்கழகப் பணியாளர்கள், மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் உட்படப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

பொதுமக்களிடையேயான சுகநலனில் அக்கறை கொள்ளலில் விழிப்பணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் “யாழ் ஆரோக்கிய நகரம்” என்ற செயற்திட்டத்தின் கீழ் இந்த விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணி மேற்கொள்ளப்பட்டது.

உலக நாடுகள் பலவற்றில் உலக வங்கி “ஆரோக்கிய நகரங்கள்” என்ற எண்ணக்கருவை நடைமுறைப்படுத்தி கணிசமான ஆரோக்கிய நகரங்களை அடையாளப்படுத்தியும் உள்ளது. அந்த அடிப்படையில்
தென்னாசியாவிலேயே முதன் முறையாக யாழ்ப்பாண நகரம் தெரிவு செய்யப்பட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீடத்தின், சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத் துறையின் நேரடி ஒருங்கிணைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தலில் உலக சுகாதார ஸ்தாபனம் , யாழ். மாநகர சபை, யுனிசெப், சுகாதார சேவைகள் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, கல்வி அமைச்சு , அரச – அரச சார்பற்ற நிறுவனங்கள் , யாழ் மாவட்ட செயலகம்,யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலகங்கள் உட்படப் பல்வேறு தரப்பினரும் இத்திட்டத்தின் பங்காளிகளாகத் தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version