இலங்கை

காவல் படை வழக்கில் இருந்து மணிவண்ணன் விடுவிப்பு – காவல் படை மீண்டும் இயங்கும்

Published

on

யாழ்.மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட “காவல் படை” தொடர்பிலான வழக்கில் இருந்து , யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், காவல் படையின் சீருடைகளையும் மீள கையளிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் , யாழ்.மாநகர சபையினரால் காவல் படை உருவாக்கப்பட்டது. யாழ்.மாநகர சுகாதாரத்தை மேம்படுத்துதல் , குப்பைகளை பொது இடங்களில் வீசுவார்கள் , பொது இடங்களில் துப்புவார்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக தண்டம் விதித்தல் , தேவைப்படின் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவே காவல் படை உருவாக்கப்பட்டது.

குறித்த காவல் படையின் சீருடையானது தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல்துறையினரின் சீருடையை ஒத்தது என பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

முன்னதாக காவல் படையை சேர்ந்தவர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் , தொடர்ந்து யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்தீபனிடமும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதனை தொடர்ந்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை அழைத்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் , முதல்வரை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா அழைத்து சென்றனர்.

விசாரணைகளின் பின்னர் மறுநாள் , முதல்வரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , நீதிமன்றால் முதல்வர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது , வழக்கினை மேற்கொண்டு நடாத்தவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் மன்றுக்கு அறிவித்தமையை அடுத்து யாழ். மாநகர முதல்வரை வழக்கில் இருந்து மன்று விடுவித்து விடுதலை செய்ததுடன் , சான்று பொருட்களாக மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு இருந்த காவல் படையின் சீருடைகளையும் மாநகர சபையிடம் ஒப்படைக்க மன்று உத்தரவிட்டது. 40

காவல் படை மீண்டும் இயங்கும்.

யாழ்.மாநகர சபைக்கு உற்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்ட காவல் படையை புலிகளின் மீள் உருவாக்கம் , புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்தது என பொய்க்குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் இருந்து தற்போது முதல்வர் விடுவிக்கப்பட்டதுடன் , சீருடைகளையும் மீள கையளித்து உள்ளதால் , காவல் படை என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ , அந்த நோக்கத்திற்காக மீள செயற்படும் என மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்தீபன் தெரிவித்தார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version