இலங்கை

ஊடக மற்றும் தகவல் விளங்கறிவை மேம்படுத்தும் ஒப்பந்தத்தில் யாழ். பல்கலை கைச்சாத்து!

Published

on

ஊடக மற்றும் தகவல் விளங்கறிவை (Media and Information Literacy) மேம்படுத்தும் நோக்கிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஊடக மற்றும் தகவல் விளங்கறிவுக்கான மையமும் (Center for Media and Information Literacy) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் கைச்சாத்திட்டன. இந்த நிகழ்வு ஜூலை 19 ஆம் திகதி, காலை யாழ். பல்கலைக் கழக சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவும், விழிப்புணர்வுடனான தகவல் நுகர்வையும் ஊடக மற்றும் தகவல் விளங்கறிவையும் மக்களிடையே ஊக்குவிக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஊடக மற்றும் தகவல் விளங்கறிவுக்கான மையத்தின் சார்பில் வைத்தியக் கலாநிதி எம். ஏ. வை. அரபாத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்வில், கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் கே. சுதாகர், ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் பேராசிரியர் சி. ரகுராம், கலைப்பீடப் பிரதிப் பதிவாளர் திருமதி அனுஷா சிவனேஸ்வரன், ஊடகக் கற்கைகள் துறை விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் சுயாதீன ஊடக மற்றும் தகவல் விளங்கறிவு ஆலோசகர் கலாநிதி எம். சி. ரஸ்மின் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

விழிப்புணர்வுடனான தகவல் நுகர்வின் அடிப்படையில் செம்மையான தகவல் பரிமாற்றத்துக்கு பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களைத் தயார்படுத்தும் செயற்பாடுகளை உள்ளடக்கியிருக்கும் இந்த ஒப்பந்தப்படி, இலங்கையில் தற்போது காணப்படும் ஊடக மற்றும் தகவல் விளங்கறிவுக் கல்வியில் வெளித்தெரியும் இடைவெளிகளையும், குறைபாடுகளையும் ஆய்வு செய்யவும் இடமளிக்கப்படுள்ளது. இந்த ஆய்வின் பேறாக, இலங்கைக்குப் பொருத்தமான ஊடக மற்றும் தகவல் விளங்கறிவுக் கல்வி பற்றிய முன்மொழிவுகளும் வெளியிடப்படவுள்ளன.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version