அரசியல்

போராட்டக்களத்தில் வெற்றி கொண்டாட்டம்!

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் , சபாநாயகருக்கு கிடைத்துவிட்டதென அதிகாரப்பூர்வ தகவல் வெளியான கையோடு, காலி முகத்திடல் போராட்டக்களத்தில் முகாமிட்டிருந்த போராளிகள் உள்ளிட்ட மக்கள் பெருமெடுப்பில் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டாசு கொளுத்தி, வாண வேடிக்கை நிகழ்த்தி பேண்ட் வாத்திய முழக்கத்துடன், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமென நேற்றிரவு களைகட்டியது போராட்டக்களம்.

தேசியக் கொடிகளை தாங்கி, ஜனநாயக சமரில் வென்றுவிட்டோம் என சூளுரைத்த போராட்டக்காரர்கள், நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கத்தை விடவும் மக்கள் சக்தியே உயரியது எனவும் கோஷமெழுப்பினர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி காலி முகத்திடலில் தன்னெழுச்சி போராட்டம் ஆரம்பமானது. அப்போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு வலுத்தது. சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், கட்சிகள் என பல தரப்புகளும் நேசக்கரம் நீட்டின.

இந்நிலையில் மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்களம், அலரிமாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த போராட்டக்களம்மீது அரச அனுசரணை பெற்ற குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து மக்கள் கிளர்ந்தெழுந்தனர். நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. அரசியல் பிரமுகர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன. ஆளுங்கட்சி எம்.பியொருவர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.

அன்று மாலையே மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். ஜுன் 9 ஆம் திகதி பஸில் ராஜபக்ச எம்.பி. பதவியை துறந்தார். எனினும், கோட்டா பதவி விலகவில்லை.

இந்நிலையில் மக்கள் எழுச்சியின் 2 ஆவது அலை ஜுலை 9 ஆம் திகதி கொழும்பை தாக்க தொடங்கியது. மக்கள் எழுச்சிக்கு அஞ்சி – ஜனாதிபதி மாளிகையிலிருந்து தப்பியோடிய கோட்டா, 13 ஆம் திகதி பதவி விலகவுள்ள அறவிப்பை அன்றிரவே சபாநாயகர் ஊடாக விடுத்தார். ஜனாதிபதி மாளிகை, செலயகம் என்பன போராட்டக்காரர்கள் வசம் வந்தன.

ஜுலை 13 ஆம் திகதியும் போராட்டம் வெடித்தது. அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம் என்பன போராட்டக்காரர்கள் வசமாகின.

ஜனாதிபதி செயலகம்தவிர, கைப்பற்றப்பட்ட ஏனைய இடங்களில் இருந்து போராட்டக்காரர்கள் நேற்று வெளியேறினர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version