இலங்கை

ஊடக அடக்குமுறை என்பது சர்வாதிகாரத்தின் மற்றுமொரு வடிவம்! – யாழ்ப்பாண ஊடக மன்றம் அறிக்கை

Published

on

நேற்றைய போராட்டங்களின் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் ஊடகவியலாளர்கள் சம்பவம் தொடர்பில் யாழ் ஊடக மன்றம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாட்டிலே தற்போது ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமான ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வினை தலைமைத்துவமாக கொண்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மக்கள் எழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக இன்றையதினம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் காரணமாக ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறினார்.

குறித்த சம்பவங்களை நீண்ட நாளாக மக்களின் குரலாக பல்வேறு வழிகளிலும் வெளி கொண்டு வந்த ஊடகங்களில் சக்தி தொலைக்காட்சியும் உள்ளடங்குகின்றது.

இதன் ஒரு அங்கமாக இன்றைய தினம் இடம்பெற்ற சம்பவங்களை சேகரிப்பதற்காக செய்தியாளர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மாளிகைக்கு சென்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த சக்தி தொலைக்காட்சியின் (News 1st) செய்தியாளர்கள் நால்வர் மிகவும் கொடூரமாக பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஊடகம் ஒரு நாட்டின் பிரதான சக்தியாக இருந்து வரும் வேளையில் உள்ளதை உள்ளவாறு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஊடகங்களை கண்மூடித்தனமாக தாக்குகின்ற அரசின் செயற்பாடு அதிலும் குறிப்பாக பொலிசாரின் நிகழ்வுகளையும் கூட செய்தியாக வழங்குகின்ற ஊடகவியலாளர்கள் மீது மிலேச்சத்தனமாக மேற்கொண்ட தாக்குதலை யாழ்ப்பாண ஊடக மன்றம் என்ற ரீதியில் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.

மக்கள் நீண்ட நாட்களாக அத்தியாவசிய பொருட்கள் இன்றி பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வரும் இந்த வேளையிலே எமது நாட்டிற்கு உதவி வழங்குகின்ற உலக நாடுகள் கூட ராஜபக்ச குடும்பம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை மிகவும் ஆணித்தரமாக முன் வைத்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே குறித்த போராட்ட தொடர்பான விடயங்களை உடனுக்குடன் மக்களுக்கு வழங்குகின்ற செய்தியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

குறித்த தாக்குதலுக்கு பொறுப்பான பொஸிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அதற்கு கட்டளையிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் அவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற சட்ட நடவடிக்கை அனைவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும்.

ஊடக அடக்குமுறை என்பது ஒரு நாட்டில் இடம்பெறுகின்ற சர்வாதிகாரித்தின் மற்றுமொரு வடிவம் என்பதையும் நாம் இந்த சந்தர்ப்பத்திலே அரசாங்கத்திற்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம். – என்றுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version