அரசியல்

பயங்கரவாத தாக்குதல்! – அச்சமடைய வேண்டாம் என்கிறது பாதுகாப்பு அமைச்சு!

Published

on

” பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள புலனாய்வு தகவல் தொடர்பில் விசாரணை இடம்பெறுகின்றது. பொதுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி உச்சக்கட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.” – என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், பொதுமக்கள் வீணாக குழப்பமடைய வேண்டியதில்லை என்றும், தமது அன்றாட நடவடிக்கைகளை அச்சமின்றி முன்னெடுத்துச் செல்லுமாறும் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக பிரிவால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற புலனாய்வுத் தகவல் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கு, பொலிஸ்மா அதிபர் அனுப்பிய கடிதமொன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

‘கறுப்பு ஜூலையை’ நினைவு கூரும் வகையில், இம்மாதம் 05 மற்றும் 06ஆம் திகதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று குறிப்பிட்டு புலனாய்வு வட்டாரங்கள் மூலம் கிடைக்கப் பெற்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது உறுதிப்படுத்தப்படாத புலனாய்வுத் தகவல் ஆகும்.

மேலும் ‘கறுப்பு ஜூலை’யைத் தொடர்புபடுத்தி இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் தொடர்புடைய அடிப்படை தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கபெற்றில்லை .

இந்த தாக்குதல் பயங்கரவாதக் குழுக்களால் நடத்தப்படலாம் என்றும், அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்த அல்லது நிலைகுலையச் செய்ய அரச எதிர்ப்பு குழுக்களால் நாட்டில் வன்செயல்களை உருவாக்கக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற மேற்படி புலனாய்வு தகவல்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேசமயம் பொதுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி உச்சக்கட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொதுமக்கள் வீணாக குழப்பமடைய வேண்டாம் என்றும், தமது அன்றாட நடவடிக்கைகளை அச்சமின்றி முன்னெடுத்துச் செல்லுமாறும் பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொள்கிறது.” – என்றுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version