இலங்கை

ஓகஸ்ட் 1 முதல் நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை!

Published

on

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று காலை 9 மணியளவில் யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெற்ற நல்லூர் மஹோற்சவம் வழமைபோன்று அதாவது 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு எவ்வாறு உற்சவம் நடந்ததோ அதேபோல இம்முறை இடம்பெறுமென யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கு பின்னர் நல்லூர் ஆலயப் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மாநகர முதல்வர் மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஓகஸ்ட் 1ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு ஓகஸ்ட் 29 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும்.

ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது.

அதேபோல வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது. காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது.

ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும்.

சுகாதார கட்டுப்பாடுகள் இம்முறை திருவிழாவின் போது காணப்படாது. ஆனாலும் ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது சுகாதாரத்தில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும். இவை தவிர எதிர்வரும் காலங்களில் தேவைப்படும்போது கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவோம் – என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர், மாநகர பிரதி முதல்வர், நல்லூர் ஆலய பரிபாலகரின் பிரதிநிதிகள், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version