இலங்கை

வடக்கு வைத்தியர்களுக்கு மட்டும் ஏன் பாராபட்சம்? – ஆளுநருடனான சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் காட்டம்

Published

on

வடக்கு மாகாண வைத்தியர்களின் சம்பள குறைப்பு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் ஒன்லைன் வாயிலாக நடைபெற்றது.

இந்த சந்திப்பில், முக்கியமான இரு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பு தொடர்பில் யாழ் மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் வைத்தியர் உமாசுதன் தெரிவிக்கையில்,

இன்று வடமாகாணத்தை பிரதிநித்துவபடுத்தும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், மத்திய குழு உறுப்பினர் டாக்டர் வாசன் ரட்ணசிங்கம், வட மாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டீபன், மாவட்ட இணைப்பாளர் வைத்தியர் உமாசுதன் ஆகியோர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வட மாகாண ஆளுநருடன் கலந்துரையாடலை மதியம் ஒன்றரை மணியளவில் ஒன்லைன் வாயிலாக ஏற்படுத்தி இருந்தோம்.

இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வட மாகாண சுகாதார சேவைகள் செயலாளர், வட மாகாண துணை செயலாளர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இங்கே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினராகிய நாம் எமது வைத்தியர்களுக்கான சம்பளம் ஆனது உரிய முறையில் வழங்கப்படாது, அவர்களது சம்பளமானது எந்தவித அறிவிப்புமின்றி சடுதியாக குறைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதை நாங்கள் வெகுவாக கண்டித்தோம். இந்த நடவடிக்கையானது அரச சுற்றுநிரூபத்துக்கு முற்றிலும் மாறுபட்டது என்பதை நாம் எடுத்துக்காட்டினோம்.

இந்த நடவடிக்கையானது இலங்கையில் சில மாகாணங்களில், அதாவது இரண்டு மாகாணங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் மற்ற மாகாணங்களில், அவர்களுக்கு தேவையான உரிய முறையான முழுமையான சம்பளத்தை வழங்கியிருந்தனர்.

இது வடக்கு மாகாண சுகாதார அலுவல்கள் திணைக்களத்தின் ஓர் முறையற்ற நடவடிக்கை என்பதனை நாம் இந்த கலந்துரையாடலில் நாம் சுட்டிக்காட்டினோம். மற்ற மாகாணங்களில், குறித்த கொடுப்பனவுகளை முறையாக வழங்க முடியுமாயின், ஏன் இதனை வடமாகாணத்தினரால் ஏன் வழங்க முடியாது இருந்தது என்ற கேள்வியையும் நாம் இங்கு எழுப்பியிருந்தோம்.

மற்றும், அத்தியாவசிய சேவையான சுகாதார சேவை வழங்குனரான நாம் உரிய முறையில், எரிபொருளை பெற்றுக்கொள்ள சிரமங்களை எதிர்நோக்குவதனையும் ஆளுநரிடம் எடுத்துக்கூறி இருந்தோம்.

இதேவேளை, ​​“மருத்துவர்கள் உண்மையில் வேலை செய்வதை விட அதிக ஊதியம் பெறுகிறார்கள்” என்ற நிதித்துறை துணைச் செயலாளரின் அறிக்கையை வடக்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காண்டீபன் வன்மையாகக் கண்டித்தார்.

அத்துடன் ஏனைய மாகாணங்கள் சுகாதார ஊழியர்களுக்கு உடன் சம்பளம் வழங்க முடியுமானால் ஏன் வடமாகாணத்தினால் அவ்வாறு செய்ய முடியாது எனவும் அவர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். இது வடமாகாண சுகாதார திணைக்களத்தின் பிடிவாதமே தவிர, மாகாணத்திற்கான வருடாந்த ஒதுக்கீடு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த போதிலும், நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்றும், அது தேவையற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் இன்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கொழும்பில் சுகாதார அமைச்சர் மற்றும் நிதியமைச்சின் பிரதானிகளுடனான கலந்துரையாடலின் போது இந்த எமது சம்பள குறைப்பானது சுட்டிக்காட்டப்பட்ட தருணத்தில், சுகாதார அமைச்சு மற்றும் நிதியமைச்சு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கு இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி வழங்கியது.

கொழும்பில் இன்று காலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சர் மற்றும் நிதி அமைச்சின் பிரதானிகள் ஆகியோருடன் கலந்துரையாடி இந்த சம்பள குறைப்பு தொடர்பான எமது முறைப்பாட்டை தெரிவித்தபோது, சுகாதார அமைச்சும் நிதியமைச்சும் இந்த சம்பள குறைப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அதிகாரிகளுக்கு புதிய சுகாதார, அந்தந்த பிரதேச அதாவது அந்தந்த மாகாண சுகாதார திணைக்களங்களுக்கும், அந்த அந்தந்த பிரதேச வைத்திய அத்தியட்சகர்களுக்கும் அந்தந்தப் பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்களுக்கும், வழங்க வேண்டிய உரிய சம்பளத்தை உடனடியாக வழங்குவதற்குத் தேவையான சுற்றுநிரூபத்தை உடனடியாக அனுப்புவதாக அங்கு உறுதியளிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடலின்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை, சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான பொருத்தமான பொறிமுறையொன்றை மாவட்ட அலுவலர் மற்றும் உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தமக்கு வழங்குமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வட மாகாண சுகாதார சேவைகள் செயலாளர் ஆகியோரிடம் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பான நடவடிக்கைகளை சரியாக அவதானித்து நடவடிக்கைக்கு எடுக்குமாறு, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பிலான மேலதிக முன்னேற்றங்களை நாங்கள்உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில் எமது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் மீண்டும் ஆளுநரை சந்திப்போம் – என்றார்.

#SriLankaNews

1 Comment

  1. Pingback: 1500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version