இலங்கை

மண்ணெண்ணெய் விநியோகத்தில் இழுத்தடிப்பு! – மக்கள் போராட்டத்தில் குதிப்பு!

Published

on

அட்டன் பகுதிக்கான மண்ணெண்ணெய் விநியோகத்தில் இழுத்தடிப்பு தொடர்வதால் ஆத்திரமடைந்த மக்கள், இன்று (25.06.2022) வீதிக்கு இறங்கி சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்ததால் போக்குவரத்து சில மணிநேரம் முற்றாக முடங்கியது. பதற்ற நிலையும் உருவானது. பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

அட்டன் – கொழும்பு பிரதான வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் குதித்ததால் பொது போக்குவரத்து ஊடாக வெளியிடங்களுக்கு செல்வதற்கு தயாரானவர்களுக்கும் தடை – தாமதம் ஏற்பட்டது.

அட்டன், பிள்ளையார் கோவில் சந்தியில் உள்ள ‘சிபேட்கோ’ எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கடந்த சில நாட்களாக மண்ணெண்ணெய் வரவில்லை. மக்கள் வரிசைகளில் காத்திருந்து பெரும் ஏமாற்றத்துடனேயே வீடு திரும்பினர். எனினும், இன்று (25) மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இதனால் மக்களும் அணிவகுத்து நின்றனர்.

எனினும், மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவில்லை. தமக்கு இன்னும் மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை என நிர்வாக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், தமக்கு உடனடியாக மண்ணெண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், தாமதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் – அட்டன், கொழும்பு பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் அட்டன் – கொழும்பு, அட்டன் – நுவரெலியா , அட்டன் – கண்டி உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கான போக்குவரத்து சேவை சில மணிநேரம் ஸ்தம்பிதமடைந்தது. பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.

மக்களை வதைக்கும், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

பின்னர் பொலிஸாரின் தலையீட்டுடன் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எதிர்வரும் திங்கட்கிழமை மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அட்டன் பொலிஸ் நிலைய அத்தியட்சகரினால் உறுதியளிக்கப்பட்டது. போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது. போராட்டக்காரர்களும் கலைந்து சென்றனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version