இலங்கை

இக்கட்டான நிலையில் உதவுவோம்! – IMF உறுதி

Published

on

“சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைய, இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவி வழங்கப்படும்.”

இவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து, கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

ஒரு வார காலம் இந்நாட்டில் தங்கியிருக்கும் பிரதிநிதிகள் குழு நிறைவேற்று பணிக்குழாம் மட்டத்திலான உடன்படிக்கையை எட்டுவது தொடர்பாகவும் மற்றும் கொள்கை ரீதியான விடயங்கள் தொடர்பிலும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும். பிரதமர், நிதியமைச்சு, மத்திய வங்கி மற்றும் ஏனைய பொருளாதார அதிகாரிகள், நிபுணர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து அவர்கள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ எதிர்பார்த்துள்ளதாக தூதுக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விரிவாக தெளிவுபடுத்திய ஜனாதிபதி , இக்கட்டான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு உதவுவது தொடர்பில் பிரதிநிதிகள் குழுவுக்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட செயற்பாட்டுத் தலைவர் (Peter Breuer), செயற்பாட்டுத் தலைவர் (Masahiro Nozaki), வதிவிடப் பிரதிநிதி கலாநிதி (Tubagus Feridhanu setyawan), ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் (Anne Marie Gulde), சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி சீ. அமரசேகர, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்,ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன, பிரதி நிதிச் செயலாளர் எம்.எஸ்.எஸ். சமன் பெர்னாண்டோ, பிரதி ஆளுநர் டி.எம்.ஜெ.வை.பி.பெர்னாண்டோ மற்றும் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி பி.கே.ஜி. ஹரிச்சந்திர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version