இலங்கை

பழைய பண்பாட்டுக்குரிய சின்னங்களை மீளுருவாக்கம் செய்து வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது ஏற்புடையதல்ல! – சித்தார்த்தன் குற்றச்சாட்டு

Published

on

பௌத்த சிங்கள மக்களே வாழ்ந்திராத ஒரு பிரதேசத்தில் பௌத்தம் சார்ந்த சின்னங்கள் கண்டுபிடிக்கப்படுமானால், அதை ஒரு மரபுரிமைச் சின்னமாக பாதுகாப்பதே நியாயமானது. அதைவிடுத்து பழைய பண்பாட்டுக்குரிய சின்னங்களை மீளுருவாக்கம் செய்து வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

அநுராதபுரத்தில் திராவிட கலை மரபில் கட்டப்பட்ட 20க்கும் மேற்பட்ட சைவ ஆலய இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவ் ஆலயங்கள் தேசிய மரபுரிமைச் சின்னங்களாக கருதப்பட்டனவேயொழிய அவை மீளுருவாக்கம் செய்யப்படவில்லை. அங்கு சைவ கோயில்கள் கட்டப்படவில்லை. பொலனறுவையில் 12 சைவ கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை புதுப்பிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர தமிழ் சமூகத்தை எச்சரிக்கை செய்து, பௌத்த சிங்கள மக்களிற்கும் எல்லையுண்டு, அந்த எல்லையை அவர்கள் தாண்டிவிடுவார்கள் என தெரிவித்திருந்தார்.

குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி புத்தர் சிலையை நிறுவ முயற்சித்த போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் வினோநோகராதலிங்கம், செ.கஜேந்திரன், முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் க.சிவனேசன் தலைமையில் ஒரு போராட்டம் நடத்தி, அந்த முயற்சி நிறுத்தப்பட்டது. அதைப்பற்றித்தான் வீரசேகர அங்கு தெரிவித்துள்ளார்.

உண்மை நிலைமையை கூற வேண்டுமென்பதாலேயே, இன்றைய விவாதப் பொருளுக்கு வெளியில் சென்று அதை குறிப்பிடுகிறேன்.

சரத் வீரசேகரவின் பேச்சு ஆக்ரோசமாக இருந்தது. இப்படியானபேச்சுக்கள்தான் இன முறுகலை ஏற்படுத்தி, போரை கொண்டு வந்து, இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமான போர் ஏற்பட்டது என்பது அவருக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலைமையில் கூட வீரசேகரவின் உரை, இன, மத மோதலுக்கு வழிவகுக்கும்.

பௌத்த சிங்கள மக்களே வாழந்திராத ஒரு பிரதேசத்தில் பௌத்தம் சார்ந்த சின்னங்கள் கண்டுபிடிக்கப்படுமானால், அதை ஒரு மரபுரிமைச் சின்னமாக பாதுகாப்பதே நியாயமானது. அதைவிடுத்து பழைய பண்பாட்டுக்குரிய சின்னங்களை மீளுருவாக்கம் செய்து வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. தொல்லியல் சட்டங்களையோ, நடைமுறைகளையோ பின்பற்றாமல் இவ்வாறு வழிபாட்டுத்தலங்ளை உருவாக்குவது, அங்கு திட்டமிட்டு பௌத்த, சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கான கால்கோள். இது இனங்களிடையே முரண்பாடுகளை வளர்த்து நாட்டை அழிவுகளுக்கு இட்டுச் செல்லுமேயொழிய, நாட்டை முன்னேற்றவோ ஐக்கியத்தை கட்டியெழுப்பவோ மாட்டாது.

அநுராதபுரத்தில் திராவிட கலை மரபில் கட்டப்பட்ட 20க்கும் மேற்பட்ட சைவ ஆலய இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவ் ஆலயங்கள் தேசிய மரபுரிமைச் சின்னங்களாக கருதப்பட்டனவேயொழிய அவை மீளுருவாக்கம் செய்யப்படவில்லை. அங்கு சைவ கோயில்கள் கட்டப்படவில்லை. பொலனறுவையில் 12 சைவ கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை புதுப்பிக்கப்படவில்லை. அவை தென்னிந்திய “மகாஜான” பௌத்த கலை மரபுக்குரியவை. இலங்கையின் மூத்த தொல்லியல் அறிஞர்களான பேராசிரியர் பரணவிதாரண, நந்தா விஐயசேகர,சேனக பண்டார போன்றவர்கள் வடக்கு, கிழக்கு இலங்கையில் காணப்படும் பௌத்த கட்டட கலை மரபுகள் தென்னிந்தியாவுக்குரியவை என சந்தேகத்திக்கிடமின்றி குறிப்பிட்டுள்ளனர்.

பாலி இலக்கியத்தில்கூட குருந்துமலை “குருந்தலூர்” என குறிப்பிடப்பட்டு அது தமிழ் மக்கள் சார்ந்த இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதை காணலாம். 1815ல் அரச அதிகாரியான லூயிஸ் அவர்கள் தனது அறிக்கையொன்றில் குருந்தலூரில் இந்து ஆலயங்களின் இடிபாடுகளை நந்தியுடன் கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறாயினும் மத அடையாளமானது இனத்தின் அடையாளமாகாது. பௌத்தமதத்தின் தோற்றுவாய் இந்து சமயம் தான். இலங்கையில் பௌத்தம் ஆரம்பத்தில் தமிழர்களாலேயே பின்பற்றப்பட்டது என்பதற்கான சான்றாதாரங்கள் நிறையவுண்டு. பின்னர், சிங்கள பௌத்த நிலைப்பாடு காரணமாகவே பின்னர் அதில் மாற்றம் வந்தது. உலகில் பல நாடுகளில் பௌத்தம் பின்பற்றப்படுகிறது. அங்கெல்லாம் மொழியுடன் சேர்த்து பேசப்படுவதில்லை.

நாம் எந்த மததத்திற்கும்எதிரானவர்கள் அல்ல. எனது பெயரே அதற்கு சான்று.

தமிழ் மன்னர்களால் பௌத்த கோவில்களுக்கு வழங்கப்பட்ட பொருளுதவிகள் தொடர்பாக பல கல்வெட்டு குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல சிங்கள மன்னர்கள் சைவ கோயில்கள் கட்டியுள்ளனர். அவர்கள் மதத்தையும், மொழியையும் ஒன்றாக்கவில்லை.

இப்படியான காரணங்களினாலேயே கடந்த கால யுத்தம் ஏற்பட்டது. யுத்தத்தில் நாமும் சம்பந்தப்பட்டோம். ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே வாழ வேண்டுமென இன்று நாம் நம்புகிறோம். அப்படியான நிலைமையை உருவாக்கினால்தான், இன்றைய விவாதப் பொருளான சுகாதார சேவைகள் நெருக்கடி பற்றிய பிரச்சனைகளை பேசு வேண்டிய தேவையிருக்காது.

இனியாவது அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்ட வாழ வேண்டும். இதில் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்த நாட்டை ஆளும் தரப்புக்கள், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, அதை அங்கீகரிக்க வேண்டும் – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version