அரசியல்

நெருக்கடிகள், பிரச்சினைகளுக்குத் தேர்தல்களே தீர்வு!

Published

on

நாட்டின் தற்போதைய நெருக்கடிகள், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமாயின் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியம் என்று மூத்த அரசியல் தலைவரான இரா.சம்பந்தன் கூறுகின்றார்.

அதுவே மக்களின் வேண்டுகோள், எதிர்பார்ப்பு என்றும் அவர் விளக்குகின்றார்.

இந்த அரசு மக்களின் நம்பிக்கையை முழுமையாக இழந்து விட்டது. தற்போதைய அரசால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பது தெளிவாகிவிட்டது. ஆகையால் ஆட்சி மாற்றம் அவசியம் என்கின்றார் கூட்டமைப்புத் தலைவர்.

சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் உதவிகள், சர்வதேச நாடுகளின் வலிமையான பங்களிப்பு போன்றவை இல்லாமல் இலங்கை கடைத்தேற முடியாது என்பது தெளிவு. அத்தகைய உதவிகள், ஆதரவுகள் கிட்டுவதற்கும் நம்பகத்தன்மையான – மக்கள் ஆதரவு பெற்ற அரசாட்சி இருப்பது முக்கியம். அந்த நம்பகத்தன்மையை இழந்து விட்ட தற்போதைய ஆட்சிப்பீடத்தால் சர்வதேச ஆதரவையும் உதவிகளையும் திரட்டுவது கூட சாத்தியமற்றதுதான்.

சரி. அப்படியானால் ஆட்சி மாற்றம் அவசியம்தான். ஆட்சி மாற்றம் என்றால் எது? அந்த மாற்றம் எவ்வாறு ஏற்பட முடியும்? – என்ற கேள்விகள் எழுகின்றன.2019 நவம்பர் முதல் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருக்கின்றார். முதலில் அவரது தலைமையின் கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி அரசு அதிகாரத்தில் இருந்தது. அந்த அரசு கலைக்கப்பட்ட பின்னர், பொதுத் தேர்தலை அடுத்து மஹிந்த ராஜபக்ச பிரதமரானார். அவரின் கீழ் முற்றிலும் மாறுபட்ட இரண்டு அமைச்சரவைகள் அடுத்தடுத்துப் பதவியில் இருந்தன. இப்போது பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த இறங்க ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் பிறிதொரு அரசு வந்து விட்டது.

ஆக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் நிதி மந்திரிகள், மத்திய வங்கி ஆளுநர்கள், திறைசேரி செயலாளர்கள் எனப் பலர் மாறியமை போல் இப்போது அரசுகளும் மாறி நான்காவது அரசும் வந்து விட்டது.

இப்படியான அரசு மாற்றங்கள், இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டு மீளப் போதுமானவையா என்பதுதான் கேள்வி.

அரசு மாற்றம் என்பது – இப்போது இந்த நெருக்கடிச் சூழலில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்குத் தேவைப்படும் அரசு மாற்றம் என்பது வெறுமனே ஆள்கள் – பிரமுகர்கள் மாற்றம் மட்டுமல்ல. மஹிந்த போய் ரணில் வந்தார் என்பது போன்ற மாற்றமல்ல.

அரசியல் கட்டமைப்பு ரீதியான முழு மாற்றமே இன்று தேவைப்படுகின்றது.

ஜனாதிபதியிலிருந்து அரசு வரை முழுக் கட்டமைப்பு ரீதியான மாற்றமே அவசரமாகவும், அவசியமாகவும் தேவைப்படுகின்றது.

சம்பந்தன் சுட்டிக் காட்டுகின்றமை போல் அரசின் மீதும், ஜனாதிபதியின் மீதும் மக்கள் நம்பிக்கையை முழுமையாக இழந்து விட்டார்கள்.

இந்த இரண்டு அலகுகளையுமே மாற்ற வேண்டுமானால் அதற்கு வழி புதிய தேர்தல்கள்தான். மக்களின் விருப்பை – எதிர்பார்ப்பை – இறைமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தேர்தலே தரும் என்பதால் அதற்கான தேர்தல்களை – ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை விரைந்து நடத்துவதுதான் பொருத்தமான மார்க்கமாக இருக்கும்.

– ‘காலைக்கதிர்’ ஆசிரியர் தலையங்கம் (16.06.2022)

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version