அரசியல்

அரசியல் சூதாட்டத்தால் ஆபத்தில் ’21’ திருத்தம்! – சஜித் சுட்டிக்காட்டு

Published

on

“ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமலாக்கி அந்த அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்குப் பாரப்படுத்தும் வகையிலான 21ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தற்போது ஆடப்படுகின்ற அரசியல் சூதாட்டத்தின் காரணமாகவே 21ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆபத்து நிகழ்ந்திருக்கின்றது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மறுசீரமைப்புக்கான தேசிய இயக்கத்தின் பிரதிநிதிகள் குழுவினருடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகையில்,

“நீதி அமைச்சரின் 21 ஆவது திருத்தம், அரசின் 21 ஆவது திருத்தம், எதிர்க்கட்சியின் 21 ஆவது திருத்தம் என எதுவும் இல்லை. ரஞ்சித் மத்தும பண்டாரவால் தனிநபர் பிரேரணையாகக் கொண்டுவரப்பட்ட 21 ஆவது திருத்தம் மாத்திரமே தற்போதுள்ள ஒரே ஒரு திருத்தமாகும்.

உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படவுள்ளது. நாடாளுமன்றத்தின் மூன்றாவது வாரத்தில் அது குறித்து விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படலாம்.

எவ்வாறாயினும், இந்நாடு சீர்திருத்தங்களைவிட அரசியல் விளையாட்டுக்களில் மூழ்கியிருப்பதால் இது பற்றி விவாதிக்கப்படாத இரண்டாம் பட்ச கவனிப்பே இருக்கின்றது.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கான தீர்வு மக்களின் புதிய ஆணையிலேயே தங்கியுள்ளது.

இந்த நெருக்கடிக்கு சில மாதங்களில் தீர்வு கிடைக்கும் எனச் சில வீரர்கள் பெருமை பேசினாலும்கூட, உண்மையான நிலைப்பாடு அவ்வாறு இல்லை.

புதிய சீர்திருத்தச் செயற்பாடுகளுக்கு சகல தரப்புகளினதும் யோசனைகள் இன்றியமையாதது” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version