அரசியல்

வெற்றிச்செல்வியை ஐந்தரை மணிநேரம் துருவியது பொலிஸ் புலனாய்வு!

Published

on

முன்னாள் போராளியும் எழுத்தாளரும் சமூக சேவையாளருமாகிய வெற்றிச்செல்வி சந்திரகலா, பொலிஸ் புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட அவரைப் பொலிஸார் ஐந்தரை மணித்தியாலங்கள் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். நேற்றுமுன்தினம் புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் இருந்து விசேடமாக வருகை தந்த புலனாய்வுப் பொலிஸாரே தன்னை விசாரணை செய்தனர் என்று வெற்றிச்செல்வி கூறினார். அவரால் வெளியிடப்பட்ட ‘பங்கர்’ என்ற நூலைப் பற்றியும், மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பைப் பற்றியும் இந்த நீண்ட விசாரணை அமைந்திருந்தது என்று அவர் தெரிவித்தார்.

போர்க்காலத்தில் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்களில் இருந்து உயிர் தப்புவதற்காக வன்னிப் பிரதேச மக்கள் பங்கர்கள் எனப்படுகின்ற பதுங்கு குழிகளிலேயே அபயம் தேடியிருந்தனர். அந்தப் பங்கர் வாழ்க்கை மிக மோசமானது; துயரமானது; மறக்க முடியாதது.

பங்கர்களில் பதுங்கி இருந்து தமது உயிருக்காகப் போரடிய பலரும் அந்த அனுபவங்களை ஒரு வாழ்க்கைப் பதிவாக பங்கர் நூலில் எழுதியுள்ளனர். இருபதுக்கும் மேற்பட்டவர்களுடைய அந்தப் பதிவுகளை ‘பங்கர்’ என்ற நூலில் வெற்றிச்செல்வி தொகுத்து வெளியிட்டிருந்தார். இந்த நூல் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு மாற்றுத்திறனாளிகளுக்காக மாற்றுத்திறனாளிகளால் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அரச பதிவு பெற்றுள்ள இந்த நிறுவனம் கடந்த பல வருடங்களாக மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்துக்கும் வாழ்க்கை நலனுக்காகவும் செயற்பட்டு வருகின்றது. இந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராக வெற்றிச்செல்வி சந்திரகலா செயற்பட்டு வருகின்றார்.

மன்னார் பொலிஸ் நிலையத்தில் வெற்றிச்செல்வி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அதேவேளை, மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவரையும் பொலிஸார் அடம்பனில் வைத்து விசாரணை செய்துள்ளனர். இந்த அமைப்பின் செயற்பாடுகள், அதற்கான நிதி மூலம் என்று பல கோணங்களில் இந்த விசாரணை நடைபெற்றது என அந்த அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

#SriLankaNews

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version